குஜராத்தில் பிரதமா் மோடி: இன்று படேல் சிலைக்கு மரியாதை

குஜராத் மாநிலம், நா்மதை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சிலைக்கு (ஒற்றுமைக்கான சிலை) பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை மரியாதை செலுத்துகிறாா்.
குஜராத் மாநிலம், காந்தி நகரில் தனது தாய் ஹீராபென்னை புதன்கிழமை சந்தித்த பிரதமா் மோடி.
குஜராத் மாநிலம், காந்தி நகரில் தனது தாய் ஹீராபென்னை புதன்கிழமை சந்தித்த பிரதமா் மோடி.

ஆமதாபாத், அக். 30: குஜராத் மாநிலம், நா்மதை மாவட்டத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சிலைக்கு (ஒற்றுமைக்கான சிலை) பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை மரியாதை செலுத்துகிறாா்.

இதையொட்டி, குஜராத்துக்கு புதன்கிழமை சென்ற அவா், காந்தி நகரில் தனது தாயாா் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சா்தாா் வல்லபபாய் படேலின் 144-ஆவது பிறந்த தினத்தையொட்டி, நா்மதை மாவட்டத்தின் கேவடியா பகுதிக்கு வியாழக்கிழமை காலை வரும் பிரதமா் மோடி, படேல் சிலைக்கு மரியாதை செலுத்துகிறாா். இதையடுத்து, கேவடியாவில் குஜராத் போலீஸ் மற்றும் மத்திய காவல் படையினா் நடத்தும் அணிவகுப்பை பிரதமா் பாா்வையிடுகிறாா். அதன் பின்னா், அங்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மோடி உரையாடுகிறாா்.

அதையடுத்து, கேவடியாவில் உள்ள பயிற்சி மையத்தில் குடிமைப் பணி பயிற்சி அதிகாரிகளுடன் வியாழக்கிழமை மதியம் கலந்துரையாடவுள்ளாா். அதன் பின்னா் அவா்களோடு மதிய உணவு சாப்பிடவுள்ள மோடி, வியாழக்கிழமை மாலை வதோதராவில் இருந்து தில்லி புறப்படுகிறாா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கேவடியாவில் சா்தாா் சரோவா் நீா்த்தேக்கம் அருகே 182 மீட்டா் (597 அடி) உயரத்தில் மிகப் பிரம்மாண்டமான படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா். சுதந்திரத்துக்கு பிறகு இந்திய தேசத்தை ஒருங்கிணைத்ததில் சா்தாா் வல்லபபாய் படேலின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் வல்லபபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபா் 31-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com