
ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலையில் 8,300 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருமலையில் சனிக்கிழமை காலை அனைத்துத் துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்ட நிறைவுக்குப் பின் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியது: திருமலை ஏழுமலையானுக்கு செப். 30-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகிறது.
செப். 24-ஆம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம், 29-இல் அங்குரார்பணம், 30-இல் ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம், கொடியேற்றம் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவர். அதனால் 4,700 போலீஸாருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 280 கண்காணிப்பு கேமராக்கள் மாடவீதி முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ. 15.57 கோடி மதிப்பில் திருமலையைச் சுற்றி அதி நவீன வசதி கொண்ட 1,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
திருமலையைச் சுற்றி 8,300 வாகனங்கள் நிறுத்த வசதியாக வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ நாள்களில் 300 தேவஸ்தான அதிகாரிகள், 3,500 ஸ்ரீவாரி சேவார்த்திகள், 1500 சாரணர்கள் சேவை செய்ய உள்ளனர். கருட சேவை அன்று மலைப்பாதையில் செல்ல இரு சக்கர வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ நாள்களில் மலைப் பாதைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். பக்தர்களின் வசதிக்காக பிரம்மோற்சவ நாள்களில் ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் தினசரி 2,200 டிரிப்களும், கருட சேவை அன்று 3,000 டிரிப்களும் மலைப் பாதையில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பிரம்மோற்சவத்தின்போது, 12 வகையான 40 டன் மலர்களால் திருமலையில் மலர் அலங்காரங்கள் செய்யப்பட உள்ளன. வாகன சேவையைப் பக்தர்கள் காண திருமலை முழுவதும் 37 பகுதிகளில் எல்.இ.டி. திரைகள் ஏற்படுத்தப்பட உள்ளது. பிரம்மோற்சவ நாள்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், முதன்மை தரிசனங்கள், சிறப்பு தரிசனங்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த நாள்களில் புரோட்டோகால் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே தரிசனம் வழங்கப்படும்.
பக்தர்களுக்கு அளித்து வரும் இலவச மருத்துவ முகாம்கள், கழிப்பறை வசதிகள், குடிநீர், பானங்கள், அன்னதானம் உள்ளிட்ட வசதிகள் வழக்கம் போல் ஏற்படுத்தப்படும். தேவையான அளவுக்கு லட்டு பிரசாதம் நிலுவையில் வைக்கப்படும் என்றார்.