
வங்கிகளை இணைப்பது நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கும் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, மங்களூரில் சனிக்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். வீடிழந்தவர்களுக்கு உடனடியாக வீடு கட்டித்தர வேண்டும்.
வங்கிகளை இணைப்பதன் மூலம் அவை வலிமையடைவதில்லை. வங்கிகளை இணைப்பது பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கும். நாட்டில் உள்ள 27 தேசிய வங்கிகளையும் இணைத்து 12 வங்கிகளாக மாற்றியிருப்பதன் மூலம், வங்கித் துறையை பலப்படுத்தியுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. இதில் எனக்கு உடன்பாடில்லை. வங்கிகளை இணைப்பதால் வங்கிகள் திறன் வாய்ந்தவையாக மாறப் போவதில்லை.
அரசியலமைப்புச் சட்ட அமைப்புகளை மத்திய அரசு சீர்குலைத்து வருகிறது. தன்னாட்சி உரிமை பெற்ற அமைப்புகளில் தனது அதிகாரத்தை செலுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி உள்பட வங்கித் துறையில் மத்திய அரசின் தலையீடு அதிகரித்தவண்ணம் உள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 3.7 சதவீதம் முதல் 4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜிடிபி 5 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் ஜிடிபி இந்தளவுக்கு வீழ்ச்சி அடைந்திருப்பது இதுவே முதல்முறையாகும். மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் நாட்டின் ஜிடிபி 8 முதல் 9 சதவீதமாக இருந்தது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கணிசமாக வீழ்ச்சி நிலையை அடைந்துள்ளது என்றார் அவர்.