
மகாராஷ்டிர மாநிலத்தில் வீட்டு வசதித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ஜெயினுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவரைத் தவிர, மற்றொரு முன்னாள் அமைச்சர் குலாப்ராவ் தேவ்கர் உள்பட 47 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் ரூ.29 கோடி செலவில் 5,000 வீடுகள் கட்டுவதற்கு கண்டேஷ் பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், அங்கு 1,500 வீடுகள் மட்டுமே முடிக்கப்பட்டன. அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த சிவசேனைக் கட்சியின் மூத்த தலைவர் சுரேஷ் ஜெயின், அந்த நிறுவனத்துக்குச் சாதகமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல், ஜல்கான் மேயராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாப்ராவ் தேவ்கரும் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னாளில் இவர் மாநில அமைச்சரானார்.
இந்த வீட்டு வசதித் திட்ட முறைகேடு குறித்து ஜல்கான் முன்னாள் ஆணையர் பிரவீண் கெடாம், கடந்த 2006-ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சுரேஷ் ஜெயின் கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். ஓராண்டு சிறை வாசத்துக்குப் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதேபோல், குலாப்ராவ் தேவ்கர் கடந்த 2012-ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு, 3 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கில், துலே மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஸ்ருஷ்டி நீல்கண்ட் சனிக்கிழமை தீர்ப்பளித்தார். அதில், முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ் ஜெயினுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தேவ்கருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், எஞ்சிய 46 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இவர்களில், சுரேஷ் ஜெயின், குலாப்ராவ் தேவ்கர் ஆகியோரைத் தவிர, மற்றவர்கள் முன்னாள் மேயர் மற்றும் முன்னாள் அதிகாரிகள் ஆவர்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் குற்றவாளிகள் 48 பேரும் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.