சென்செக்ஸ் 770 புள்ளிகள் வீழ்ச்சி

இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதாக தொடர்ந்து வந்த செய்திகளின் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை
சென்செக்ஸ் 770 புள்ளிகள் வீழ்ச்சி


இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதாக தொடர்ந்து வந்த செய்திகளின் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  வர்த்தகம் கரடியின் பிடியில் சிக்கியது. சென்செக்ஸ் 770 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக சரிந்தது, முக்கிய எட்டு துறைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான புள்ளிவிவரம் சந்தைக்கு சாதகமான அம்சமாக அமையவில்லை.
ரூபாய் மதிப்பு சரிவு: அந்நியச் செலாவணி சந்தையில்,  டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 97 காசுகள் சரிந்து 72.39-ஆக வீழ்ச்சி கண்டதும் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுதவிர, சாதகமற்ற சர்வதேச நிலவரங்கள், அமெரிக்கா-சீனா இடையே நீடித்து வரும் வர்த்தகப் போர் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் முதலீட்டாளர்கள் லாப நோக்கு கருதி பங்குகளை விற்பனை செய்தனர்.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், வேதாந்தா, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி பங்குகளின் விலை 4.45 சதவீதம் வரை சரிவைக் கண்டன. அதேசமயம்,  டெக் மஹிந்திரா மற்றும் ஹெச்சிஎல் டெக் ஆகிய இரு நிறுவனப் பங்குகள் விலை மட்டும் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 769 புள்ளிகள் (2.06%) சரிந்து 36,562 புள்ளிகளாக நிலைத்தது. 
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 225 புள்ளிகள் (2.04%) வீழ்ச்சியடைந்து 10,797 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com