எந்தக் கட்சியும் முற்றிலுமாக அழிந்து விடுவதில்லை: பாஜகவுக்கு சிவசேனை பதிலடி

எந்தக் கட்சியும் முற்றிலுமாக அழிந்து விடுவதில்லை என்று சிவசேனை கூறியுள்ளது. இதன் மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சி பற்றி கருத்து கூறிய பாஜகவுக்கு சிவசேனை பதிலடி கொடுத்துள்ளது.
எந்தக் கட்சியும் முற்றிலுமாக அழிந்து விடுவதில்லை: பாஜகவுக்கு சிவசேனை பதிலடி


எந்தக் கட்சியும் முற்றிலுமாக அழிந்து விடுவதில்லை என்று சிவசேனை கூறியுள்ளது. இதன் மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சி பற்றி கருத்து கூறிய பாஜகவுக்கு சிவசேனை பதிலடி கொடுத்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் பாஜக அல்லது சிவசேனையில் அண்மைக்காலமாக இணைந்து வருகின்றனர்.
இதனிடையே, சோலாப்பூரில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மீது குற்றம்சாட்டியிருந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பல்வேறு தலைவர்கள் வெளியேறி விட்டதால் அக்கட்சியில் விரைவில் சரத் பவார் மட்டுமே இருப்பார் என்றும் அவர் கிண்டலாகக் கூறியிருந்தார். 
இது குறித்து பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனையின் அதிகாரபூர்வ சாம்னாநாளிதழில் வியாழக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
மகாராஷ்டிரத்தின் வளர்ச்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. பவாரின் சொந்த ஊரான பாராமதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தபோது, பவாரின் பங்களிப்பை அவரே ஒப்புக் கொண்டார். மோடி, பவாரை தனது குருநாதர் என்று அப்போது குறிப்பிட்டிருந்தார்.
அப்படி இருந்தும்,  சோலாப்பூர் பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசும்போது, சரத் பவார் வாரிசு அரசியல் நடத்துவதாகவும் ஊழல்வாதி என்றும் குற்றம்சாட்டியுள்ளார். பாஜக தலைவர்கள் ஒருபுறம் சரத் பவாரைப் புகழ்வதும் மறுபுறம் அவர் மகாராஷ்டிரத்துக்கு என்ன செய்தார் என்று கேட்பதும் அக்கட்சியின் இரட்டை வேடத்தைக் காட்டுவதாக பவாரின் பேரன் ரோஹித் பவார் கூறியுள்ளது சரிதான். 
பாஜக தலைவர்கள் தங்கள் வசதிக்கேற்ப சரத் பவாரைப் புகழ்ந்து அல்லது இகழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பாஜகவின் விமர்சனங்களுக்கு பவார் குடும்பத்தில் இருந்து பதிலடி கொடுத்த முதல் நபர் ரோஹித் பவார்தான்.
இப்போது மகாராஷ்டிரத்திலும் மத்தியிலும் பவாரோ, காங்கிரஸ் கட்சியோ ஆட்சி நடத்தவில்லை. மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும் அக்கட்சித் தலைவர் சரத் பவார் மீதான பாஜகவின் விமர்சனம் தொடர்கின்றன. அதற்கு பதிலாக, மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் தற்போதைய மாநில அரசின் செயல்பாடுகள் குறித்தே பாஜக தனது பிரசாரத்தில் முக்கியத்துவம் தர வேண்டும். காங்கிரஸில் ஏற்பட்ட பிளவில் இருந்து உருவான கட்சிதான் தேசியவாத காங்கிரஸ். அக்கட்சி தற்போது பிளவுபட்டு வருகிறது. மகாராஷ்டிர அரசியலில் பவாரின் பிடி தளர்ந்து வருவதையே தேசியவாத காங்கிரஸின் தற்போதைய நிலை உணர்த்துகிறது. செல்வாக்குடன் இருந்த காலகட்டத்தில் அவரும் மற்ற கட்சிகளை உடைக்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
அரசியல் காற்று மாறி வீசலாம். கட்சிகள் உருவாக்கப்படுகின்றன - சரிவைச் சந்திக்கின்றன. ஆனால் எந்தக் கட்சியும் முற்றிலுமாக அழிந்து விடுவதில்லை. இதை அரசியலில் உள்ள அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று தலையங்கத்தில் சிவசேனை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com