சுடச்சுட

  

  மருத்துவர்களுக்கு எதிரான தாக்குதல் விவகாரம்: தனிச் சட்டம் கோரி தாக்கலான மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் 

  By DIN  |   Published on : 07th September 2019 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supremecourt


  நாடு முழுவதும் மருத்துவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க தனியாக சட்டம் இயற்ற உத்தரவிடக் கோரி மருத்துவர்கள் அமைப்பு தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 
  இந்த விவகாரம் தொடர்பாக அசோசியேஷன் ஆப் ஹெல்த்கேர் புரவைடர்ஸ் (இந்தியா) -ஏஎச்பிஐ எனும் அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
  இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) நடத்திய ஆய்வில், கடந்த காலங்களில் நாடு முழுவதும் உள்ள 75 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் குறைந்தபட்சம் சில வடிவிலான வன்முறையை எதிர்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்புச் சட்டம், கடந்த 10 ஆண்டுகளில் 19 மாநிலங்களில் அறிவிக்கை செய்யப்பட்டது. இருந்த போதிலும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீதான தாக்குதலைத் தடுக்கவில்லை. நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.
  இந்த வன்முறையைத் தடுப்பதில் நோயாளிகள், உறவினர்கள், சமூகத்திற்கு அதிகப் பொறுப்புள்ளது. நோயாளிகள், மருத்துவமனைகள் அல்லது மருத்துவர்கள் இடையிலான பிரச்னைகள் வன்முறை மூலம் தீர்க்கப்படுவதில்லை. நாகரிகமிக்க ஒரு சமூகத்தில் பிரச்னைகளைத் தீர்க்க வழிமுறைகள் உள்ளன. அவை பயன்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 
  எனவே, மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல், சொத்துகளுக்கு சேதத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை தனிக் குற்றமாக்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
   இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோர்அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ஆண்டுதோறும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மருத்துவர்கள் பாதுகாப்பின்றி அச்சத்துடன் வாழும் சூழல் உள்ளது. ஆகவே, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்கும் வகையில், தனியாகச் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
  இதையடுத்து, மனு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சகம், சட்டத் துறை அமைச்சகம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai