இந்தியாவும், இஸ்ரோவும் ஒரு நாள் சாதிக்கும்: பூடான் பிரதமர் நம்பிக்கை வாழ்த்து

சந்திராயன் 2 கடைசி நிமிடத்தில் சில சவால்களைக் கண்டது. ஆனால் நீங்கள் காட்டிய தைரியமும் கடின உழைப்பும் வரலாற்றில் இடம்பெறும்.
பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் - பிரதமர் நரேந்திர மோடி
பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் - பிரதமர் நரேந்திர மோடி



பிரதமர் நரேந்திர மோடியும், இஸ்ரோவும் இணைந்து ஒரு நாள் சாதிப்பார்கள் என்று பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் நம்பிக்கை வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சந்திராயன் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இன்று அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது.

நிலவை நோக்கி சிறப்பாக பயணித்து வந்த லேண்டர் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ தொலைவே உள்ள நிலையில், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து இஸ்ரோவின் தலைவர் சிவன் நா தழுதழுத்த குரலில் விக்ரம் லேண்டரில் இருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என்று அறிவித்தார்.

இந்த நிகழ்வை இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக பார்வையிட்ட பிரதமர் மோடி,  இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமானது அல்ல. நிலவைத் தொடும் இந்தியாவின் முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று கூறிச் சென்றார்.

இந்நிலையில், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், இந்தியா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் குறித்து நாங்கள் இன்று பெருமைப்படுகிறோம். சந்திராயன் 2 கடைசி நிமிடத்தில் சில சவால்களைக் கண்டது. ஆனால் நீங்கள் காட்டிய தைரியமும் கடின உழைப்பும் வரலாற்றில் இடம்பெறும். பிரதமர் மோடி குறித்து நான் அறிவேன். அவரும் அவரது இஸ்ரோ குழுவும் ஒரு நாள் அதை சாதிக்கும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com