அரசு பங்களாக்களுக்கு வாடகை: முன்னாள் முதல்வர்களுக்கு விலக்கு அளிக்க உத்தரகண்டில் அவசர சட்டம்

உத்தரகண்டில் பதவிக்காலம் முடிந்தும் அரசு பங்களாக்களில் தங்கியிருந்த முன்னாள் முதல்வர்கள், அதற்கான வாடகையை சந்தை விலையில்


உத்தரகண்டில் பதவிக்காலம் முடிந்தும் அரசு பங்களாக்களில் தங்கியிருந்த முன்னாள் முதல்வர்கள், அதற்கான வாடகையை சந்தை விலையில் செலுத்த வேண்டும் என்று அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதிலிருந்து விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டத்தை மாநில ஆளுநர் பிறப்பித்துள்ளார்.
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர்கள் பகத் சிங் கோஷ்யாரி, என்.டி.திவாரி, ரமேஷ் போக்ரியால் (தற்போதைய மத்திய அமைச்சர்), புவன் சந்திர கந்தூரி, விஜய் பகுகுணா ஆகியோர், தங்களது பதவிக் காலம் முடிந்தும் அரசு பங்களாக்களில் தங்கியிருந்தது சட்டவிரோதம் என்று அந்த மாநில உயர்நீதிமன்றம் கடந்த 2016-இல் உறுதி செய்தது. அவர்கள் அனைவரும் அரசு பங்களாக்களை உடனடியாக காலி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, முன்னாள் முதல்வர்கள் 5 பேரும் அரசுக்கு ரூ.13 கோடி செலுத்தும் நிலை ஏற்பட்டது. அவர்களில், என்.டி.திவாரி கடந்த ஆண்டு, அக்டோபரில் மரணடைந்தார். இதனிடையே, அரசு பங்களாக்களுக்கான வாடகையை செலுத்த முன்னாள் முதல்வர்களுக்கு 6 மாத கால கெடு விதித்து, உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் 3-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி வாடகை செலுத்துவதிலிருந்து முன்னாள் முதல்வர்களுக்கு விலக்கும் அளிக்கும் அவசர சட்டத்தை, மாநில ஆளுநர் பேபி ராணி மௌர்யா பிறப்பித்துள்ளார். இதனால், முன்னாள் முதல்வர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
உத்தரகண்டில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com