உன்னாவ் வழக்கு: சிறப்பு நீதிபதி கோரிக்கை மீது விரைந்து முடிவெடுக்க தில்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் விபத்தில் சிக்கி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்தே காணொலிக் காட்சியின் வாயிலாக அவரிடம் வாக்குமூலம் பெற
உன்னாவ் வழக்கு: சிறப்பு நீதிபதி கோரிக்கை மீது விரைந்து முடிவெடுக்க தில்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்


உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் விபத்தில் சிக்கி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்தே காணொலிக் காட்சியின் வாயிலாக அவரிடம் வாக்குமூலம் பெற சிறப்பு நீதிபதி அனுமதி கோரியுள்ளதன் மீது விரைந்து முடிவெடுக்குமாறு தில்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் சிபிஐ 2 வாரங்களுக்குள்ளாக தனது விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண் விபத்துக்குள்ளான வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிஐக்கு உத்தரவிட்டது. 
மேலும், வழக்கு விசாரணையை நிறைவு செய்ய சிறப்பு நீதிபதிக்கு 45 நாள்களுக்கும் கூடுதலாக அவகாசம் தேவைப்பட்டால், அதைப் பரிசீலிக்கலாம் எனவும் நீதிபதிகள் அமர்வு கூறியது. 
முன்னதாக, விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட பெண் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வாக்குமூலம் பெற அனுமதி கோரி சிறப்பு நீதிபதி தர்மேஷ் சர்மா தில்லி உயர்நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். 
இதற்கு சிபிஐ அமைப்போ, அந்தப் பெண்ணோ, அவரது குடும்பத்தினரோ ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று உயர்நீதிமன்ற பதிவாளரிடம் சிறப்பு நீதிபதி தர்மேஷ் சர்மா தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. 
நிலவர அறிக்கை: இதனிடையே, போக்சோ சட்டத்தின் கீழ் 100-க்கும் மேலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பான நிலவர அறிக்கையை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், சம்பவத்தின்போது சிறுமியாக இருந்ததை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பதின்வயதுப் பெண் ஒருவர் கடந்த 2017-ஆம் ஆண்டு புகார் அளித்தார். இந்த விவகாரத்தில், செங்கர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் அந்தப் பெண் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி ஒன்று  மோதியது. இதில், அந்தப் பெண்ணின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பதின்வயதுப் பெண், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அந்த விபத்தை ஏற்படுத்தியதாக செங்கர் மீது தனியே கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com