காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்ச்சை கருத்து: ஷெகலா ரஷீத் மீது தேச துரோக வழக்கு

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளமான சுட்டுரையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்ததற்காக ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம் அமைப்புத் தலைவர் ஷெகலா ரஷீத் மீது தேச துரோக சட்டத்தின்


ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளமான சுட்டுரையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்ததற்காக ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம் அமைப்புத் தலைவர் ஷெகலா ரஷீத் மீது தேச துரோக சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த மாதம் 17ஆம் தேதி சுட்டுரையில் ஷெகலா ரஷீத் வெளியிட்ட பதிவுகளில், ராணுவ வீரர்கள் வீட்டுக்குள் புகுந்து சூறையாடியதாகவும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாகவும் பதிவு செய்திருந்தார்.    ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரான ஷெகலா ரஷீத் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக உச்சநீதிமன்ற வழக்குரைஞர் அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா தில்லி காவல் துறை ஆணையர் அமுல்யா பட்நாயக்கிடம் புகார் அளித்தார்.
அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், நாட்டில் வன்முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொய்யான செய்திகளையும் பரப்ப ஷெகலா ரஷீத் முயற்சி செய்கிறார் என்று அந்தப் புகாரில் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகார் தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேச துரோகம் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஷெகலா ரஷீதுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி தாய்நாட்டுக்காக எதிரான கோஷங்களை எழுப்பியதற்காக அந்தப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உள்பட 10 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 
அப்போது, மாணவர் சங்கத் துணைத் தலைவராக இருந்தவர் ஷெகலா ரஷீத் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பெயர் உள்பட 35 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றது. நடவடிக்கை எடுப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com