Enable Javscript for better performance
vladivostok to chennai by sea- Dinamani

சுடச்சுட

  விளாடிவோஸ்டாக் - சென்னை கடல் பாதை - சீனாவின் பட்டுப்பாதைக்குப் போட்டியா?

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 10th September 2019 05:25 PM  |   அ+அ அ-   |    |  

  silk_road


  மார்க்கோ போலோவும் பட்டுப் பாதையும் (Marco Polo Silk Road)

  கி.மு. 1-ம் நூற்றாண்டில் சீனாவின் டாயுவான், பார்த்திய மற்றும் பக்திரிய நாடுகளுடனான அரசாங்க உறவு பேணும் நடவடிக்கைகளை தொடர்ந்து இந்தியா மற்றும் மேற்கத்திய உலகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சாலை உருவானது. இந்த பட்டுப்பாதையில் மக்கள் பொருட்கள் மற்றும் கலாச்சாரத்தை பரிமாறிக்கொண்டனர்.

  பட்டுப் பாதை என்பது பண்டைக் காலத்தில் வண்டிகளும் (caravan), கடற்கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது ஆசியாவின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் சாங்கான் (Chang'an) பகுதியை சின்ன ஆசியாவின் அன்டியோச்சுடன் இணைத்தது. இது 6500 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது. இதன் செல்வாக்கு ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது. பட்டுப் பாதை என்ற சொல்லுக்கு நிகரான Seidenstraße என்னும் ஜெர்மானியச் சொல்லை, 1877 இல், இப்பாதைக்கும் பெயராக வைத்தவர் பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென் (Ferdinand von Richthofen) என்னும் ஜெர்மானியப் புவியியலாளர் ஆவார்.

  வடக்குச் சீனாவின் வணிக மையங்களுக்கு அப்பால், பட்டுப் பாதை, வடக்கிலும் தெற்கிலுமாக இரு கூறாகப் பிரிந்து செல்கின்றது. வடக்குப் பாதை, புல்கர்-கிப்சாக் (Bulgar–Kypchak) பகுதியூடாக கிழக்கு ஐரோப்பாவுக்கும், கிரீமியன் தீவக்குறைக்கும் (Crimean peninsula) சென்று அங்கிருந்து, கருங்கடல், மர்மாராக் கடல் என்பவற்றைக் கடந்து பால்கன் பகுதியூடாக வெனிசை அடைகின்றது.

  பண்டை காலத்தில் முக்கிய வர்த்தகர்கள் இந்தியர்கள் மற்றும் பாக்ட்ரியன் மக்கள், பின்னர் 5ஆம் நூற்றாண்டில் இருந்து 8 ஆம் நூற்றாண்டு வரை சொக்டியன் வர்த்தகர்களும், பின்னர் அரபு மற்றும் பாரசீக வர்த்தகர்களும் பட்டுப்பாதையை பயன்படுத்தினர்.

  நாடுகாண் பயணங்களை மேற்கொண்ட இத்தாலியை சேர்ந்த மாலுமி மார்க்கோ போலோ, 1254 இல் சீனா சென்று அன்றைய ஆட்சியாளர் குப்லாய் கான் மூலம் இரத்தினக்கற்களை வாங்குவதற்கு சீன பட்டுப்பாதை ஊடாக இலங்கை வந்தபோது இலங்கையில் முஸ்லிம்கள் மாத்திரமே இரத்தினக்கல் வணிகத்தில் ஈடுபட்டிருந்ததாக “மார்க்கோபோலோ கடல் மார்க்க பயணங்கள்” தொடர்பான நீண்ட வரலாற்று ஆவணத்தில் பதிவாகியுள்ளது.

  (கி. பி. 1254-1324) மத்தியகால சரித்திரத்தில் மார்க்கோ போலோ அவருடைய பிரயாணங்களின் வரலாறுகள் கிறிஸ்தோப்பர் கொலம்பஸ் எழுதியவற்றின் ஒர் பிரதியை வைத்திருந்தாரென்றும், அதை ஊன்றிப் படித்ததன் பயனாகவே அவ்வழியைக் கண்டுபிடித்தாரென்றும் கூறுவர்.

  ஐரோப்பாவுக்கு மாற்று

  சீனாவில், பட்டுச்சாலை என்ற பதத்தை சில கல்வி சஞ்சிகைகள் அவ்வப்போது பயன்படுத்தி வந்தன. அதன்பிறகு, 1950களில், தங்களுடைய அண்டை நாட்டினர் உடனான உரையாடல்களில் சீனர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கினார்கள். மேற்கத்திய சக்திகளுக்கு மாற்றாக பயன்படுத்த பட்டுப் பாதைத் திட்டம் சீனாவுக்கு உதவியது.

  சீனாவின் ஆசியக் கனவு

  இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, கடல் சார் ‘பட்டுப்பாதை திட்டம்’  (Silk Road Project) என்ற பெயரில், சீனா மிகப் பெரும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட அந்த திட்டத்திற்கு, இந்தியா இடையூறாக இருந்தால், மிகப் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பகிரங்க மிரட்டலை விடுத்துள்ளது.

  அடுத்த நிபுணத்துவம் கொண்ட சாட்சியாக நாம் எடுத்துக் கொள்ளும் புத்தகம் 'சீனாவின் ஆசியக் கனவு' (China's Asian Dream). ஆசியா முழுவதும் பயணம் செய்திருக்கும் கஜகஸ்தானின் அல்மட்டியின் மாணவரான டாம் மில்லெர் எழுதிய புத்தகம் அது.

  பட்டுப் பாதையில் சீனப் படைவீரர்கள் அணிவகுத்து நடப்பதை யாரும் பார்ப்பது சாத்தியமற்றது என்று டாம் மில்லெர் கூறுகிறார்.

  அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் இந்தப் பட்டுப் பாதை திட்டம் செயல்படுத்துவதாக சீனா சொல்கிறது. ஆனால் இதுபற்றி டாம் மில்லெர் உறுதி கூறவில்லை. அந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி, மற்ற நாடுகளுக்கு சீனா பணம் கொடுக்கும்போது, அதை வட்டியும் முதலுமாக எடுக்கத்தானே பார்க்கும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

  சீனாவின் தென்பகுதியில் இருக்கும் மலைப்பிராந்திய நாடான லாவோஸில் மக்கள் தொகை 

  இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளான பூட்டான், சிறிலங்கா மற்றும் நேபாளம் போன்றவற்றில் சீனாவின் செல்வாக்கு கையோங்குவதன் மூலம் இப்பிராந்தியத்தில் சீனா வலுமிக்கதாக மாறிவிடுமோ என இந்தியா அச்சப்படுகின்றது.

  கிழக்கு ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைப்பதற்கான மிகப் பாரிய வர்த்தக மற்றும் கட்டுமான வலைப்பின்னல் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக 2013ல் சீன அதிபர் Xi Jinping  தகவல் வெளியிட்டார். புதிய பட்டுப் பாதை [New Silk Road]  மற்றும் கடல்வழிப் பட்டுப் பாதை [Maritime Silk Road] ஆகியவையே இவ்விரு திட்டங்களாகும். சீன அதிபர் இத்திட்டங்கள் தொடர்பான தகவலை வெளியிட்டு ஓர் ஆண்டிற்குள் இவற்றை அமல்படுத்துவதில் சீன அரசாங்கம் முனைப்பும் ஆர்வமும் காண்பித்தது. தனது அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டிய இடத்தில் தனது நிதியைச் செலவிடுதல் அவசியமானது என்பதை சீனாவின் இந்த நகர்வு உறுதிப்படுத்தியது.

  திட்டமிடப்பட்ட பட்டுப் பாதை பொருளாதார அபிவிருத்தியின் ஒரு பகுதியாக சீன மாகாணங்களில் தொடரூந்துப் பாதைகள், வீதிகள் மற்றும் நீர்க்குழாய்கள் போன்றவற்றை நிர்மாணிப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் 16.3 பில்லியன் டாலர்களை ஒதுக்குவதென சீனா தீர்மானித்துள்ளதாக சீன அரசாங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி Bloomberg ஊடகம் செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தியை சீன அரசின் ‘சீன டெய்லி’ தனது ஊடகத்தில் வெளியிட்டுள்ளது. சீனாவால் மிகப் பெரியளவில் முதலீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்படும் இவ் அபிவிருத்தித் திட்டமானது சீனாவின் பின்தங்கிய பிரதேசங்களை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டாலும், புதிய பட்டுப் பாதைத் திட்டத்தை முழுமைப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

  இதேவேளையில், இத்திட்டத்திற்குள் உள்ளடங்கும் நாடுகளுக்கு சீன வங்கிகள் கடனாக நிதியை வழங்குவதற்கான உந்துதலை அளிப்பதென்பதுவும் சீனாவின் கோட்பாடாகும். பட்டுப் பாதைத் திட்டத்தில் சீனாவின் பங்காளி நாடுகளுக்கு ஏற்கனவே நிதி வழங்கப்படும் என சீனாவால் உறுதியளிக்கப்பட்டது. இந்தவகையில், சிறிலங்காவின் துறைமுக அபிவிருத்திக்காக 1.4 பில்லியன் டாலர்களும், மத்திய ஆசியாவின் கட்டுமான மற்றும் சக்தி அபிவிருத்திக்காக 50 பில்லியன் டாலர்களும், ஆப்கானிஸ்தானுக்கு பொது உதவியாக 327 மில்லியன் டாலர்களும் வழங்குவதாக சீனா அறிவித்திருந்தது என சீன டெய்லி ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுதவிர, சீனாவின் புதிய ஆசிய கட்டுமான முதலீட்டு வங்கியானது ஆசிய நாடுகளின் அபிவிருத்தி மேம்பாட்டுக்காக மேலும் நிதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் பட்டுப் பாதைத் திட்டமானது முழுமையாக நிறைவடையும் போது 21.1 ட்ரில்லியன் டலர்கள் செலவாகும் என ‘வோன்ற் சீன ரைம்ஸ்’ கணிக்கிறது.

  ஒரு வழி ஒரு சாலை {One Belt One Road (OBOR)}
  ஒன் பெல்ட் ஒன் ரோடு (OBOR) என்பது சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சிந்தனையில் உருவான ஒன்று. அது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் பரவியுள்ள பல நாடுகளிடையே இணைத்து மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சீனர்களால் "நூற்றாண்டின் திட்டம்"( Project of the Century” ) என்று அழைக்கப்படும் OBOR சுமார் 78 நாடுகளை இணைக்கிறது.

  ஒன் பெல்ட் ஒன் ரோடு (OBOR) எவ்வாறு இயங்கும்?
  ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைத்த பண்டைய பட்டு வழியை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது, புதிய பிராந்தியங்கள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை உள்ளடக்குவதற்காக திட்டத்தின் நோக்கம் பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி (Belt and Road Initiative) என்றும் அழைக்கப்படும் இந்த திட்டத்தில் சாலைகள், ரயில்வே, கடல் துறைமுகங்கள், மின் கட்டங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்வழிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு திட்டங்களின் பெரிய வலையமைப்பை உருவாக்குவது என்பது முக்கியமானதாகும்.

  இந்த திட்டம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது. முதலாவது "பட்டுச் சாலை பொருளாதார பெல்ட்" என்று அழைக்கப்படுகிறது, இது முதன்மையாக நிலத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சீனாவை மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஐரோப்பாவுடன் இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவதாக “21 ஆம் நூற்றாண்டு கடல்சார் பட்டுச் சாலை” (21st Century Maritime Silk Road) என்று அழைக்கப்படுகிறது, இது கடல் சார்ந்ததாகும், மேலும் சீனாவின் தெற்கு கடற்கரை மத்தியதரைக் கடல், ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘பெல்ட்’ உண்மையில் சாலைகளின் வலைப்பின்னல், மற்றும் ‘சாலை’ ஒரு கடல் பாதை என்பதால் பெயர்கள் குழப்பமடைகின்றன.

  அவை பின்வரும் ஆறு பொருளாதார பாதைகளைக் கொண்டுள்ளன (economic corridors)

  • மேற்கு சீனாவை மேற்கு ரஷ்யாவுடன் இணைக்கும் புதிய யூரேசிய நில பாதை(New Eurasian Land Bridge)
  • மங்கோலியா வழியாக வட சீனாவை கிழக்கு ரஷ்யாவுடன் இணைக்கும் சீனா-மங்கோலியா-ரஷ்யா பாதை (The China-Mongolia-Russia Corridor)
  • மேற்கு-சீனாவை துருக்கியுடன் மத்திய மற்றும் மேற்கு ஆசியா வழியாக இணைக்கும் சீனா-மத்திய ஆசியா-மேற்கு ஆசியா பாதை (The China-Central Asia-West Asia Corridor)
  • இந்தியா-சீனா வழியாக தெற்கு சீனாவை சிங்கப்பூருடன் இணைக்கும் சீனா-இந்தோசீனா தீபகற்ப பாதை (The China-Indochina Peninsula Corridor)
  • தென் மேற்கு சீனாவை பாகிஸ்தான் வழியாக அரேபியா கடல் பாதைகளுடன் இணைக்கும் சீனா-பாகிஸ்தான் பாதை (The China-Pakistan Corridor)
  • பங்களாதேஷ் மற்றும் மியான்மர் வழியாக தெற்கு சீனாவை இந்தியாவுடன் இணைக்கும் பங்களாதேஷ்-சீனா-இந்தியா-மியான்மர் பாதை (The Bangladesh-China-India-Myanmar Corridor)

  விளாடிவோஸ்டாக் - சென்னை

  விளாடிவோஸ்க் என்ற அதிகம் கேள்விப்படாத நகரத்தின் பெயர், கடந்த இரு நாள்களாக இந்தியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சென்னை நகரத்துடன் இணைத்துச் சொல்லப்படுகிறது, இந்த ரஷ்ய நகரம். ரஷ்யாவின் மிகப் பெரிய துறைமுகம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் உள்ளது. ரஷ்யாவுடனான இந்தியாவின் கடல் வர்த்தகம் இதுவரை மும்பை - பீட்டர்ஸ்பர்க் நகரங்களுக்கிடையே நடைபெற்றுவந்தது. பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து புறப்படும் கப்பல், பால்டிக் கடலில் தொடங்கி ஆடம் வளைகுடாவுக்குள் நுழைந்து, அரபிக்கடலில் புகுந்து மும்பையை வந்தடையும். இதற்கு, சுமார் 8,675 நாட்டிக்கல் மைல் பயணிக்கவேண்டும்.

  ரஷ்யாவிலிருந்து ஒரு சரக்குக் கப்பல் இந்தியா வந்தடைய கிட்டத்தட்ட 40 நாள்கள் ஆகும். சிரமமான கடல் வழிப் பயணம் காரணமாக, நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவைவிட சீனாவுடன்தான் அதிகம் வர்த்தகம் புரிந்துவருகிறோம். இந்த ஆண்டு, சீனாவுடன் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக வர்த்தகம் புரிந்துள்ளோம். ரஷ்யாவுடன் 2025-ம் ஆண்டுதான் 30 பில்லியன் டாலர்களுக்கு வர்த்தகம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளாடிவோஸ்க் - சென்னை கடல்வழி உருவாக்கப்படும்போது அதன் தொலைவு, 5,600 (10.300 கி.மீ) நாட்டிக்கல் மைல்கள்தான். கிட்டத்தட்ட 3,000 கடல்மைல்கள் குறைந்துவிடுகிறது. மிகப்பெரிய சரக்குக் கப்பல், மணிக்கு 20 முதல் 25 நாட் வேகத்தில் செல்லும். அப்படியென்றால், மணிக்கு 45 கிலோ மீட்டர் பயணிக்கும். ஆதலால் விளாடிவோஸ்க்கில் இருந்து சென்னைக்கு 10 முதல் 12 நாள்களில் வந்துவிடலாம். 20 நாட் வேகத்தில் பயணித்தால், அதிகபட்சமாக 14 நாள்களில் இந்தியா வந்துவிட முடியும்.

  விளாடிவோஸ்க் நகரம், ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 'ரஷ்யாவின் பிஹார்' என்று இந்தப் பகுதியைச் சொல்லலாம். ரஷ்யாவின் மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில், முன்னேற்றம் காணாத பூமி. வட கொரியா மற்றும் சீனாவுக்கு அருகில் உள்ள பெரிய ரஷ்ய நகரம், விளாடிவோஸ்க் . பசிபிக் கடலில், ரஷ்யாவின் மிகப் பெரிய துறைமுக நகரம் இது. ரஷ்ய கடற்படையின் பசிபிக் பிராந்தியத்தின் தலைமையகமும் இங்கே உள்ளது. இந்தப் பகுதியைத் தலைநகர் மாஸ்கோவுடன் இணைக்கும் புகழ்பெற்ற டிரான்ஸ் சைபீரியன் ரயில்வேயின் கிழக்குப் பிராந்திய தலைமையகமும் இருக்கிறது. முக்கியமாக, ஆட்டோமொபைல் இங்கே அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. விளாடிவோஸ்க் - சென்னை கடல்வழி என்று பார்த்தால், ஜப்பான் கடல், கொரிய தீபகற்பம், தென் சீனக் கடல் கிழக்கு சீனக் கடல், அந்தமான் வழியாக சென்னைக்கு வர முடியும். இடையே சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், மலாக்கா, தைவான், இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளும் உள்ளன. இதனால், சென்னைக்கும் இந்த நாடுகளுக்குமிடையே வர்த்தகம் பெருக வாய்ப்புள்ளது.

  இன்னொரு விஷயத்தையும் நாம் பார்க்க வேண்டும். இந்தியப் பெருங்கடலில் வர்த்தகம் என்ற பெயரில் புகுந்து சீனா அடாவடிகளைச் செய்வதோடு, ஆதிக்கம் செலுத்தவும் முயல்கிறது. இப்போது, தென் சீனக் கடல் வழியாக இந்தியாவும் ரஷ்யாவும் வர்த்தகம் புரியப்போகின்றன. ரஷ்யாவுடனான வர்த்தகம் என்பதால், இந்த விஷயத்தில் சீனா, இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. இந்தியாவை கட்டுப்படுத்தவும் முடியாது. ஏற்கெனவே, தென் சீனக் கடல் பகுதி நாடுகளுடனும் சீனா மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது. அதனால், தென் சீனக் கடலில் இந்தியா நுழைவது, அந்த நாடுகளுக்கும் கொண்டாட்டமாகிவிடும். இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்கள் வந்துபோவதுபோல தென் சீனக்கடலில் இந்தியக் கப்பல்கள் புகுந்து செல்லப்போகின்றன. இந்தியாவுடனான ரஷ்ய வர்த்தகம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உயரவும் வாய்ப்புள்ளது.

  ரஷ்யாவின் தூரகிழக்குப் பகுதிக்கு விசிட் செய்த முதல் இந்தியப் பிரதமர், மோடிதான். இந்தப் பகுதியின் மேம்பாட்டுக்காக ரஷ்யா நடத்தும் Eastern Economic Forum மாநாட்டிலும் பங்கேற்றார். ரஷ்யாவின் தூரகிழக்குப் பகுதி மேம்பாட்டுக்காக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா கடனாக அளிக்க முன்வந்துள்ளது.விளாடிவோஸ்க் நகரில் இந்தியா, துணைத் தூதரகத்தையும் திறந்துள்ளது. இந்த நகரில் தூதரகத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா என்பதும் குறிப்பிடத்தக்கது. விளாடிவோஸ்க் நகரத்துடன் சென்னை கடல் வழியாக இணைக்கப்படுவது, வருங்காலத்தில் சென்னையும் மும்பைபோல பெரும் பொருளாதார பலம் கொண்ட நகரமாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

  சீனாவின் பட்டுப் பாதைக்குப் போட்டியாகப் பார்க்கப்படும் இந்த விளாடிவோஸ்க் - சென்னை கடல் பாதை குறிப்பாக தமிழக மக்களுக்கு பாதிப்பாக அமைந்து விடக்கூடாது என்பதில் மக்களும் தமிழக அரசும் கவனத்துடன் இருக்க வேண்டும்.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp