4-வது டெஸ்டில் இங்கிலாந்து தோல்வி: ஆஷஸ் தொடரை தக்கவைத்துக் கொண்டது ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை தக்கவைத்துக் கொண்டது. 
நன்றி: ஐசிசி டிவிட்டர்
நன்றி: ஐசிசி டிவிட்டர்


இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை தக்கவைத்துக் கொண்டது. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டம் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தின் அபார இரட்டைச் சதத்தால் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதையடுத்து, 196 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஸ்டீவ் ஸ்மித்தின் அபார ஆட்டத்தால் 186 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 383 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து தொடக்கத்திலேயே தடுமாற்றத்தை எதிர்கொண்டது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் மற்றும் கேப்டன் ஜோ ரூட் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்தது 18 ரன்கள் எடுத்திருந்தது.

மேலும் படிக்க: 4-ஆம் நாள் ஆட்டம் 

இந்நிலையில், ஜோ டென்லி மற்றும் ஜேசன் ராய் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஓரளவு தாக்குபிடித்த ராய் பேட் கம்மின்ஸின் அட்டகாசமான பந்தில் 31 ரன்களுக்கு போல்டானார். அடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸும் வெறும் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டே இருந்தது. இவர்களைத் தொடர்ந்து, அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து வந்த ஜோ டென்லியும் லயான் சுழலில் ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு, ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜோஸ் பட்லர் ரன் குவிப்பதில் கவனம் செலுத்தாமல் டிரா செய்வதற்கு முயற்சித்து விளையாடினர். இருந்தபோதிலும், 25 ரன்கள் எடுத்திருந்த பேர்ஸ்டோவ் ஸ்டார்க் வேகத்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பட்லருடன் இணைந்த ஓவர்டன் நல்ல ஒத்துழைப்பு தந்தார். இந்த இணை சுமார் 21 ஓவர்களுக்குத் தாக்குப்பிடித்து ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியளித்தது. 

ஆனால், 110 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த பட்லர் ஹேசில்வுட் பந்தில் போல்டானார். தொடர்ந்து களமிறங்கிய ஆர்ச்சரும் வெறும் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, ஓவர்டனுடன் இணைந்த ஜேக் லீச் நிதானமாக விளையாடி நம்பிக்கையளித்தார். இந்த இணையும் 14 ஓவர்கள் தாக்குபிடித்து விளையாடியது. 

இதையடுத்து, பந்துவீச்சு மாற்றத்துக்காக மார்னஸ் லாபுஷானே பந்துவீச அழைக்கப்பட்டார். அதற்குப் பலனளிக்கும் வகையில், 50 பந்துகளை எதிர்கொண்டு விளையாடி வந்த லீச், இவரது ஓவரில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஓவர்டனும் (105 பந்துகளில் 21 ரன்கள்) கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்து 185 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம், ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com