'செருப்பு கூட இல்லை; வயலில் வேலை செய்துகொண்டே படிப்பேன்' - இஸ்ரோ தலைவர் சிவனின் கரடு முரடான வாழ்க்கைப் பயணம்!

பள்ளிக்குச் செல்லும் போது செருப்பு கூட இல்லை. கல்லூரிக்கு வேட்டி அணிந்து கொண்டு தான் செல்வேன்.  எனது அப்பாவுக்கு உதவியாக வயலில் வேலை செய்வேன் - இஸ்ரோ தலைவர் சிவன்
'செருப்பு கூட இல்லை; வயலில் வேலை செய்துகொண்டே படிப்பேன்' - இஸ்ரோ தலைவர் சிவனின் கரடு முரடான வாழ்க்கைப் பயணம்!

சந்திரயான் - 2 விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிக்கோட்டாவின் சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து நிலவை அடைந்த நிலையில், சனிக்கிழமை(செப்.7) சரியாக நள்ளிரவு 1.46 மணியளவில் லேண்டர் விக்ரம் தரையிறங்கத் தொடங்கியது. 

நிலவுக்கு மேலே 2.1 கிலோ மீட்டர் தொலைவில் லேண்டர் விக்ரமிடமிருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைக்கவில்லை. இதனால் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முயற்சியில் சந்திரயான் - 2 திட்டம் சற்று பின்னடைவைச் சந்தித்தது. இதனால் ஒட்டுமொத்த இந்தியர்களும் கவலை அடைந்தனர். 

இந்த நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதி ஆர்பிட்டரின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு எதுவும் கிடைக்கவில்லை என்றும் இஸ்ரோ தலைவர் இன்று தகவல் தெரிவித்துள்ளார். இது நாட்டு மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. 

இஸ்ரோ தலைவர் சிவனின் வாழ்க்கைப்பயணம்:

இஸ்ரோவின் தலைவர் சிவன் கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கல்வளையில் உள்ள ஒரு விவசாயி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அரசுப்பள்ளியில் படித்த கைலாசவடிவூ சிவன், நாகர்கோவிலிலுள்ள எஸ்.டி இந்து கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் எம்.ஐ.டியில் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படித்தார். தொடர்ந்து என்ஜினியரிங் முதுகலை தேர்ந்தார். அதன்பின்னரும் ஐஐடி மும்பையில் விண்வெளித்துறையில் பி.ஹெச்டி முடித்தார். 

'பள்ளிக்குச் செல்லும் போது செருப்பு கூட இல்லை. கல்லூரிக்கு வேட்டி அணிந்து கொண்டு தான் செல்வேன்.   மூன்று வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டது எனது குடும்பம். எனது அப்பாவுக்கு உதவியாக வயலில் வேலை செய்வேன். வேலை செய்ய வேண்டும் என்பதாலேயே எனது வீட்டிற்கு அருகிலுள்ள கல்லூரியில் படித்தேன்' என்று சிவன் தெரிவித்துள்ளார். அவரது வீட்டில் முதல் பட்டதாரி அவரே. வறுமை காரணமாக அவரது சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் கல்வியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

1982ம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்த அவர், இஸ்ரோவின் பல்வேறு சாதனைகளில் பங்கெடுத்துள்ளார். 2018 ஜனவரி முதல் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி உள்ளிட்ட ராக்கெட்டுகளின் வளர்ச்சியில் இவரது பங்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 

கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி 104 செயற்கைக்கோள்களை அனுப்பி இஸ்ரோ உலக சாதனை படைத்தது. தற்போது சந்திரயான்-2 திட்டத்திற்கும் அவரது குழு சிறப்பாக பணியாற்றியுள்ளது. 

ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாத்துரைக்கு பிறகு  விண்வெளித்துறையில் ஒரு அபார சாதனை படைத்துள்ளார் என்றே மக்கள் கருதுகின்றனர். 

லேண்டர் விக்ரமிடம் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தழுதழுத்த குரலில் கூறியதுமே, ஒட்டுமொத்த நாட்டிலும் ஒரு அமைதி நிலவியதாகவே உணரப்படுகிறது. அதன்பின்னர், சிவன் கண்ணீர் விட்டு அழுததும், பிரதமர் மோடி அவரை கட்டியணைத்து ஆறுதல் அளித்ததைப் பார்த்து கலங்கியவர்கள் ஏராளம்.

சிவன் கலங்கிய அந்த புகைப்படத்தை பதிவிட்டு, 'கலங்காதீர்கள், எங்களது ஆதரவு உங்களுக்கு உண்டு. உங்களது பயணத்தைத் தொடருங்கள்' என்று சாதாரண மக்களும் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடுவதனையும் நாம் பார்க்க முடிகிறது. 

சந்திரயான்-2 திட்டம் சற்று பின்னடைவை சந்தித்தாலும், இஸ்ரோ தலைவர் சிவன் உண்மையான ஒரு வெற்றியாளனாகவே மக்களால் பார்க்கப்படுகிறார் என்பதில் எந்த ஐயமுமில்லை. 

அவரது சாதனைப் பயணம் தொடர வாழ்த்துக்கள்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com