கர்நாடகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை வெகு விரைவில் மத்திய அரசு ஒதுக்கும்

கர்நாடகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை வெகு விரைவில் மத்திய அரசு ஒதுக்கும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை வெகு விரைவில் மத்திய அரசு ஒதுக்கும்

கர்நாடகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை வெகு விரைவில் மத்திய அரசு ஒதுக்கும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
 இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகத்துக்கு வெகு விரைவில் வெள்ள நிவாரண நிதி ஒதுக்கி மத்திய அரசு நல்ல செய்தியை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் துரிதவேகத்தில் மறுவாழ்வுப் பணிகளைச் செயல்படுத்த மத்திய அரசின் நிதியுதவி உதவியாக இருக்கும்.
 கர்நாடகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை (செப். 6) இரவு வருகை தந்த பிரதமர் மோடியிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். நம்மைவிட, கர்நாடகத்தின் வெள்ளச் சூழ்நிலைகள் குறித்து பிரதமர் மோடி நன்றாக அறிந்து வைத்திருக்கிறார். எனவே, மத்திய அரசிடம் இருந்து நல்ல செய்தி வரும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். அதன்பிறகு, மத்திய ஆய்வுக் குழுவினரும் கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, இழப்புகளை மதிப்பிட்டுச் சென்றுள்ளனர்.
 வெள்ளத்தில் 1.25 லட்சம் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இம் மக்களுக்கு புதிதாக வீடு கட்டித் தர வேண்டியுள்ளதன் காரணமாகவே, தேவையான நிதியை மாநில அரசு விடுவித்துள்ளது. மற்ற பணிகளை நிறுத்தி வைத்துவிட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் மட்டுமே மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. வெள்ள நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய அரசின் நிதி ஆதாரமும் வெகு விரைவில் நமக்கு வந்து சேரும். காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணியைத் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
 முன்னதாக, கபினி அணை அதன் முழுக் கொள்ளளவு நீர்மட்டத்தை அடைந்துவிட்டதால், கபினி ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவதற்காக மைசூருக்கு வருகை தந்த முதல்வர் எடியூரப்பாவை, மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி.சோமண்ணா, காவல் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, எம்.பி. சீனிவாஸ் பிரசாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
 பின்னர், கபினி அணைக்குச் சென்ற முதல்வர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com