ரூ.100 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்: பிரதமர் மோடி

நாடு முழுவதும் ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதே நமது இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ரூ.100 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்: பிரதமர் மோடி

நாடு முழுவதும் ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதே நமது இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
 மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு நாள் பயணமாக அவர் சனிக்கிழமை மும்பை வந்தார். இங்கு கைமுக்-சிவாஜி சௌக் பகுதிகளுக்கு இடையே ரூ.4,476 கோடி மதிப்பிலான 9.2 கி.மீ. நீளமுள்ள மெட்ரோ வழித்தடத்தை அவர் தொடக்கி வைத்தார். அதேபோல் வடாலா-சிஎஸ்டி பகுதிகளுக்கு இடையே ரூ.8,739 கோடி மதிப்பிலான 12.8 கி.மீ. நீள மெட்ரோ வழித்தடத்தையும், கல்யாண்-தலோஜா இடையே ரூ.5,865 கோடி மதிப்பிலான 20.7 கி.மீ. நீள மெட்ரோ வழித்தடத்தையும் அவர் தொடக்கி வைத்தார்.
 இந்த மூன்று ரயில் வழித்தடங்களும் வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மும்பையில் 14 வழித்தடங்களுடன் 337 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைந்திருக்கும். "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் தொடங்கி வைக்கப்பட்ட முதலாவது மெட்ரோ ரயில் பெட்டியையும் மோடி தொடக்கி வைத்தார்.
 மும்பையின் வடக்கு புறநகர்ப் பகுதியான கோரேகானில் உள்ள ஆரே காலனியில் 32 மாடிகளுடன் மும்பை மெட்ரோ ரயில் தலைமையகக் கட்டடத்துக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
 மெட்ரோ திட்டங்களைத் தொடக்கி வைத்து அவர் பேசியதாவது: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரமாக மாற்றுவது என்று நாம் இலக்கு நிர்ணயித்துள்ளதால் 21ஆம் நூற்றாண்டு உலகிற்கு ஏற்ப நமது நகரங்களை நாம் மேம்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக வாகனப் போக்குவரத்து, தகவல் தொடர்பு, உற்பத்தித் திறன், பாதுகாப்பு போன்றவற்றுக்கான கட்டமைப்புகளை நாம் மேம்படுத்த வேண்டியுள்ளது. மெட்ரோ ரயில் வழித்தடத் திட்டம், மெட்ரோ பவன், பி.கே.சி. பாலம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களும் பயணிகளுக்கு வசதிகளை அதிகரித்து வாழ்க்கையை சுலபமாக்கவே மேற்கொள்ளப்படுகின்றன.
 மும்பை மாநகரத்தில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை வேகமாக நிறைவேற்றியதற்காக முதல்வர் தேவேந்திர
 ஃபட்னவீஸுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். மும்பை என்பது இந்தியாவுக்கே ஊக்கம் தரக் கூடிய நகரமாகும். ஒவ்வொரு குடிமகனும் இந்த நகரத்தை விரும்புகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கு நாம் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்த முயற்சிகளை எடுத்தோம்.
 இந்தத் திட்டங்கள் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, எதிர்கால சந்ததியருக்கும் வசதி ஏற்படுத்தும் நோக்குடன் கொண்டுவரப்படுகின்றன. மிகவும் தாமதமாகி வந்த திட்டங்களான நவி மும்பை சர்வதேச விமான நிலையம் அல்லது மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம் போன்றவை இவ்வளவு வேகமாகவும், இவ்வளவு பெரிய அளவிலும் தொடங்கும் என்று யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
 நாடு முழுவதும் ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதே நமது இலக்கு. மும்பையுடன் சேர்த்து, மற்ற நகரங்களையும் மேம்படுத்த நாம் விரும்புகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் மும்பை நகரில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.1.5 லட்சம் கோடி செலவிடப்பட்டது. நாம் தற்போது உள்நாட்டிலேயே மெட்ரோ ரயில் பெட்டிகளையும் தயாரித்து வருகிறோம்.
 வேறு வகையில் சொல்ல வேண்டுமானால் உள்கட்டமைப்பு மேம்பாடு என்பதற்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் என்று அர்த்தம். மெட்ரோ திட்டங்களில் சுமார் 10,000 பொறியாளர்களும் 40,000 தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சிறிய பகுதிகளிலும், மாநகரங்களிலும் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
 ஆனால் யாரும் இது பற்றிப் பேசுவதில்லை. ஏனெனில் இத்தகைய பிரம்மாண்டமான அளவில் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதை இதுவரை யாரும் கண்டதில்லை. நாட்டிலேயே முதல் மெட்ரோ ரயில் வழித்தடம் கொல்கத்தாவில் 35 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இன்று 27 நகரங்களில் சுமார் 675 கி.மீ. நீள மெட்ரோ வழித்தடங்கள் உள்ளன.
 அவற்றில் 400 கி.மீ. தூர வழித்தடம் என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் இயங்கத் தொடங்கின. மேலும் 850 கி.மீ. தூர வழித்தடம் பல்வேறு நிலைகளில் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் மோடி.
 இவ்விழாவில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசுகையில் "வரும் 2020-21ஆம் ஆண்டுக்குள் மும்பையில் 120 கி.மீ. நீள மெட்ரோ ரயில் வழித்தடம் இயக்கத்துக்கு வரும். 2023-24ஆம் ஆண்டுக்குள் 85 கி.மீ. நீள மெட்ரோ வழித்தடமும், 2025-க்குள் மீதமுள்ள வழித்தடமும் பயன்பாட்டுக்கு வரும். தற்போது மும்பை புறநகர் ரயில்களை நாள்தோறும் 80 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்த மெட்ரோ வழித்தடமும் இயங்கத் தொடங்கியதும் ஒரு கோடி பேர் இந்த ரயில்களில் பயணிப்பார்கள்' என்று தெரிவித்தார்.
 மும்பையில் இருந்து ஒளரங்காபாத் நகருக்கு வந்த மோடி, அங்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கிய கைவினைப் பொருள் கண்காட்சியைப் பார்வையிட்டார். உஜ்வலா திட்டத்தின் கீழ் 8 கோடியாவது பயனாளிக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பை அவர் வழங்கினார்.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com