ஹரியாணா பேரவைத் தேர்தல்: ஜனநாயக் ஜனதா கட்சி தனித்துப் போட்டி

ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக் ஜனதா கட்சி தனியே களம் காண இருப்பதாக அக்கட்சித் தலைவர் துஷ்யந்த் செளதாலா சனிக்கிழமை அறிவித்தார்.

ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக் ஜனதா கட்சி தனியே களம் காண இருப்பதாக அக்கட்சித் தலைவர் துஷ்யந்த் செளதாலா சனிக்கிழமை அறிவித்தார்.
 அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த பகுஜன் சமாஜ் கட்சி, தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்ததை அடுத்து ஜனநாயக் ஜனதா கட்சி இவ்வாறு கூறியுள்ளது. ஜனநாயக் ஜனதா-பகுஜன் சமாஜ் இடையே சுமார் ஒரு மாதத்துக்கு முன்புதான் கூட்டணி ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 தனித்துப் போட்டியிடுவது குறித்து துஷ்யந்த் செளதாலா தனது சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
 பகுஜன் சமாஜ் கட்சியையும், அதன் தலைமையையும், கட்சித் தொண்டர்களையும் பலப்படுத்தும் நம்பிக்கையில் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், 40 இடங்களை அந்தக் கட்சிக்கு ஒதுக்கினோம்.
 எனினும், அக்கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. இருப்பினும், அக்கட்சிக்கு அரசியல் அதிகாரம், தன்னம்பிக்கை வழங்கும் எங்கள் நோக்கம் தொடரும்.
 ஜனநாயக் ஜனதா கட்சியானது, அமைப்பு ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையை மாநிலம் முழுவதுமாகத் தொடங்கியுள்ளது. கட்சித் தொண்டர்களின் கடின உழைப்பின் பேரில் சட்டப்பேரவைத் தேர்தலில் 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியமைப்போம் என்று துஷ்யந்த் செளதாலா கூறியுள்ளார்.
 முன்னதாக, ஹரியாணா பேரவைத் தேர்தலில் ஜனநாயக் ஜனதா 50 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 40 தொகுதிகளிலும் போட்டியிட மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பொருத்தமற்றதாக உள்ளது என்று கூறிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஜனநாயக் ஜனதா கட்சியுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவதாகவும், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாகவும் வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com