அமைச்சரவை விரிவாக்கம்: 6 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அமைச்சரவை விரிவாக்கம்: 6 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. அவரது மகன் கே.டி.ராம ராவ், உறவினர் டி.ஹரீஷ் ராவ் உள்பட 6 பேர் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

ஹைதராபாதில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

தெலங்கானாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தெலங்கானா ராஷ்டிர சமிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. முதல்வராக சந்திரசேகர் ராவ் பதவியேற்றார். தனது அமைச்சரவையை, கடந்த பிப்ரவரியில் அவர் விரிவாக்கம் செய்தார். அப்போது, 10 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்நிலையில், சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராம ராவ், உறவினர் டி.ஹரீஷ் ராவ், சபிதா இந்திரா ரெட்டி, கங்குலா கமலாகர், பி.அஜய்குமார், சத்யவதி ரதோட் ஆகிய 6 பேர் புதிய அமைச்சர்களாக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றனர். இதன் மூலம் தெலங்கானா அமைச்சர்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. 
கே.டி.ராம ராவ், டி.ஹரீஷ் ராவ் ஆகிய இருவரும், கடந்த 2014 முதல் 2018 வரையிலான சந்திரசேகர் ராவின் முதல் ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். காங்கிரஸிலிருந்து விலகி டிஆர்எஸ் கட்சியில் இணைந்தவரான சபிதா இந்திரா ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

சந்திரசேகர் ராவின் முதல் ஆட்சி காலத்தில் பெண் அமைச்சர்களே இல்லாத நிலை இருந்தது. தற்போதைய அமைச்சரவையில் சபிதா இந்திரா ரெட்டி, சத்யவதி ரதோட் ஆகிய 2 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com