"காஷ்மீர் விவகாரம் இந்திய இறையாண்மை தொடர்பான முடிவு": பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீர் விவகாரம் இந்திய இறையாண்மை தொடர்பான முடிவு என்று மனித உரிமை ஆணையத்தின் 42-வது கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.
"காஷ்மீர் விவகாரம் இந்திய இறையாண்மை தொடர்பான முடிவு": பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி


காஷ்மீர் விவகாரம் இந்திய இறையாண்மை தொடர்பான முடிவு என்று மனித உரிமை ஆணையத்தின் 42-வது கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.     

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகுக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த பிரச்னையை அனைத்து சர்வதேச மன்றங்களுக்கு எடுத்துச் செல்வேன் என்று உறுதிபடத் தெரிவித்து வந்தார். இவ்விவகாரத்தை பாகிஸ்தான், உலக நாடுகள் பார்வைக்கு கொண்டுச் சென்றும், சீனா தவிர்த்து மற்ற நாடுகள் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று தெரிவித்துவிட்டனர். இதனால் காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் தனித்துவிடப்பட்டதாகவே இந்தியா கருதி வந்தது. 

இந்நிலையில், இந்தப் பிரச்னையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி எழுப்பினார். இதுகுறித்து இன்று (செவ்வாய்கிழமை) பேசிய அவர், காஷ்மீர் மக்கள் கூண்டிலைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் ஜம்மு-காஷ்மீர் மிகப் பெரிய சிறையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், இவ்விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையடுத்து, இதற்குப் பதிலடி தரும் வகையில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் (கிழக்கு) விஜய் தாகுர் சிங் பேசுகையில், 

"மனித உரிமைகள் என்ற போர்வையின் கீழ் சில தீய அரசியல் உள்நோக்கம் கொண்ட காரணங்களுக்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது. நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதம் நடத்திய பிறகே ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. அவை அனைத்தும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. அதற்கான ஆதரவும் பரவலாக கிடைத்தது. 

நாடாளுமன்றத்தில் மற்ற சட்டங்களை இயற்றுவதுபோல் இதுவும் இந்திய இறையாண்மை தொடர்பான முடிவு என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இது முற்றிலுமாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகும். எந்தவொரு நாடும் தனது உள்நாட்டு விவகாரத்தில் மற்ற நாடுகளின் தலையீட்டை ஏற்றுக்கொள்ளாது. நிச்சயமாக இந்தியாவும் அதை ஏற்றுக்கொள்ளாது.

சவாலான சூழல்கள் நிலவினாலும், அடிப்படை சேவைகள், நிறுவனங்கள் இயல்பாக செயல்படுவது, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது உள்ளிட்டவற்றை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் உறுதிபடுத்துகிறது. ஜனநாயக நடைமுறைகள் அங்கு தொடங்கியுள்ளது. கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக தளர்த்தப்பட்டு வருகிறது. எல்லை தாண்டி தாக்குதல் நடத்தும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்குமிடத்தில் குடிமக்களின் பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஒரு குழு எங்கள் நாடு குறித்து தொடர்ச்சியாக தவறான குற்றச்சாட்டுகளையும், இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளையும் காட்டமாக முன்வைத்து வருகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தேசத்தில்தான் பயங்கரவாத தலைவர்கள் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததும், அந்த தேசம்தான் சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக இருப்பதும் உலகுக்கு நன்கு அறியும்.       

மாற்று ராஜதந்திரம் என்பதன் மூலம் எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை இந்த நாடு செயல்படுத்தி வருகிறது. உலக அளவில் மக்களின் உயிர் வாழும் உரிமையையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்தும் சர்வதேச அமைப்புகளுக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு உடந்தையாக இருந்து, நிதியுதவி வழங்கி அதற்கு ஆதரவாக இருபதுதான் உண்மையிலேயே மிக மோசமாக மனித உரிமையை மீறும் செயல்.

அரச பயங்கரவாத நடவடிக்கைகளால் உலக நாடுகள் நிறைய பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா அதில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகவும், அதற்கு உடந்தையாக இருந்து மனிதனின் அடிப்படை உரிமையான உயிர் வாழும் உரிமைக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க கூட்டாக முடிவு எடுக்கப்பட வேண்டிய நேரம் இது. 

பயங்கரவாதிகளுக்கு மௌனம்தான் துணிச்சலை தருகிறது. மௌனத்தைக் கலைத்து நாம் குரல் எழுப்ப வேண்டும். பயங்கரவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் எதிராக சர்வதேச அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது" என்றார்.

இந்தக் கூட்டத்தில் நேற்று தொடக்க உரையை நிகழ்த்திய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிஷெல் பச்லெட், காஷ்மீர் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், மதிப்பளிக்கப்படவும் வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இவரது கருத்துக்கும் பதிலளிக்கும் வகையிலேயே விஜய் தாகுர் சிங் இன்று இந்த உரையை நிகழ்த்தியுள்ளார்.

இதன்பிறகு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் முதல் செயலாளர் விமேஷ் ஆரியன் பேசுகையில், "சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது" என்று தெரிவித்தார். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த அவர், இதில் தலையிடுவதற்கு பாகிஸ்தானுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com