
ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜாவிக்கில் அந்நாட்டுச் சிறாருடன் கலந்துரையாடிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். உடன் அவரின் மனைவி சவிதா கோவிந்த், ஐஸ்லாந்து அதிபர் குட்னி ஜோஹான்சன்.
பல்வேறு துறைகளில் இந்தியா ஐஸ்லாந்து இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு அதிபர் குட்னி ஜோஹான்சனுடன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராம்நாத் கோவிந்த், முதல்கட்டமாக ஐஸ்லாந்துக்கு திங்கள்கிழமை வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் குட்னி ஜோஹான்சனுடன், ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், அவர்கள் இருவர் முன்னிலையில், மீன்வளத் துறையில் ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்றம், தூதரக அதிகாரிகளுக்கான விசா விலக்கு உள்ளிட்டவை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதுதொடர்பாக, ராம்நாத் கோவிந்த் கூறுகையில், மீன்வளம், கடல்சார் பொருளாதாரம், எரிசக்தி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஐஸ்லாந்து நிலையான வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த துறைகள் மட்டுமன்றி, மருந்து தயாரிப்பு, தகவல்தொழில்நுட்பம், உயிரிதொழில்நுட்பம், ஆட்டோமொபைல் ஆகிய துறைகளிலும் இரு நாடுகளின் நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.