சுடச்சுட

  

  கருப்புப் பண தடுப்பு மோசடி வழக்கு: நாளை நேரில் ஆஜராக டி.கே.சிவகுமார் மகளுக்கு அழைப்பாணை

  By DIN  |   Published on : 11th September 2019 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Aishwarya


  கர்நாடக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு எதிரான கருப்புப் பண மோசடி வழக்கில் அவரது மகள் ஐஸ்வர்யாவை வியாழக்கிழமை (செப். 12)  விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை இயக்குநரகம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

  இவ்வழக்கில் கர்நாடகத்தின் கனகபுரா தொகுதி எம்எல்ஏவான சிவகுமாரை கடந்த 3ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக, ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர், அவரிடம் 3 முறை விசாரணை நடத்தினர். இக்குற்றச்சாட்டு தொடர்பாக தில்லியில் உள்ள கர்நாடக பவன் ஊழியர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இவ்வழக்கு விசாரணைக்காக நான்காவது முறையாக தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவகுமார் கடந்த 3ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, அவர் கைது செய்யப்பட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது வேண்டுமென்றே பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிவகுமார் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில், சிவகுமார் மீதான வழக்கு தொடர்பான விசாரணைக்கு வியாழக்கிழமை நேரில் ஆஜராகுமாறு அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
  கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சில ஆவணங்களையும், சிவகுமார் தன் மகளுடன் சேர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக அளித்த வாக்குமூலத்தையும் காட்டி ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்தப்படும்.

  சிவகுமார் உருவாக்கிய கல்வி அறக்கட்டளையில் ஐஸ்வர்யாவும் ஓர் அறங்காவலராக இருக்கிறார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் கொண்டுள்ள இந்த அறக்கட்டளை பல்வேறு பொறியியில் கல்லூரிகளையும், இதர கல்லூரிகளையும் நடத்தி வருகிறது. அவற்றில் ஐஸ்வர்யா முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
  இந்தக் கல்லூரிகளில் ஐஸ்வர்யாவுக்கு உள்ள தொடர்பு குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai