இந்தியாவில் அடைக்கலம் கோருகிறார் இம்ரான் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்ஏஇன்சாஃப் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாகாணப் பேரவை உறுப்பினர் பல்தேவ் குமார், இந்தியாவில் குடும்பத்துடன் வசிக்க அடைக்கலம் கோரியுள்ளார். பாகிஸ்தானில்


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்ஏஇன்சாஃப் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாகாணப் பேரவை உறுப்பினர் பல்தேவ் குமார், இந்தியாவில் குடும்பத்துடன் வசிக்க அடைக்கலம் கோரியுள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் கைபர்பக்துன்வா மாகாணத்தின் பரிகோட் தனித் தொகுதி முன்னாள் உறுப்பினரான பல்தேவ் குமார் (43), தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்தார். பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்திலுள்ள கன்னா பகுதியில் தற்போது அவர் தங்கியுள்ளார்.
இந்நிலையில், பல்தேவ் குமார் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு, குடும்பத்துடன் வந்துள்ளேன். பிரதமர் மோடி எங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
பாகிஸ்தானில் தற்போது என்ன சூழல் நிலவுகிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றபோது, அவர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் வைத்திருந்தோம். ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர் தவறிவிட்டார் என்றார் பல்தேவ் குமார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சீக்கிய குருத்வாரா மதகுருவின் மகள் கடத்தப்பட்டு, துப்பாக்கிமுனையில் மதம்மாற்றப்பட்டதுடன், முஸ்லிம் இளைஞருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைக்கப்பட்ட சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய பல்தேவ் குமார், பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தால், இதுபோன்ற சூழல் வந்திருக்காது. பாகிஸ்தானில் வாழும் பல சீக்கிய குடும்பங்கள், அங்கிருந்து வெளியேறி, இந்தியாவிடம் அடைக்கலம் கோரும் மனநிலையில் உள்ளன என்றார்.
முன்னதாக, பாகிஸ்தானில் சீக்கிய சிறுமி வலுக்கட்டாயமாக மதம்மாற்றப்பட்ட சம்பவத்துக்கு, இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு வலியுறுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவில் சீக்கியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com