என்ஆர்சியில் இந்தியர்கள் யாரும் விடுபடமாட்டார்கள்: அமைச்சர் ஸ்மிருதி இரானி

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) இந்தியர்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
என்ஆர்சியில் இந்தியர்கள் யாரும் விடுபடமாட்டார்கள்: அமைச்சர் ஸ்மிருதி இரானி


தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) இந்தியர்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
அஸ்ஸாமில் உண்மையான இந்திய குடிமக்கள் யார் என்பதை கணக்கெடுத்த என்ஆர்சி ஆணையம், கடந்த 31ஆம் தேதி அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலை வெளியிட்டது. அதில், விண்ணப்பித்திருந்த 3.3 கோடி பேரில் 3.11 கோடி பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்தன. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, மேற்கு வங்கத்தில் என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம் என்றும், இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்மிருதி இரானி கூறியதாவது:
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. என்ஆர்சி பட்டியலில் உண்மையான இந்தியர்கள் யாரும் விடுபடமாட்டார்கள். இந்திய குடிமக்களின் நலன்களைக் காப்பதில் இந்த அரசு முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் மேற்கு வங்க முதல்வர், சட்ட விரோதமாக ஊடுருவியவர்கள் பக்கம் நிற்பது ஏன் என்று தெரியவில்லை. நாட்டு மக்களின் நலனைப் புறந்தள்ளிவிட்டு, மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல நல்ல திட்டங்கள் மூலம் மேற்கு வங்க மக்கள் பயன்பெற விடாமல் தடுத்தும் வருகிறார். மக்களவைத் தேர்தலின்போதே மேற்கு வங்க மக்கள் பாஜகவுக்கு சிறப்பான ஆதரவு அளித்தார்கள். இதன் மூலம் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவது தெளிவாகத் தெரிகிறது என்றார் ஸ்மிருதி இரானி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com