சுடச்சுட

  

  ஆப்கனில் அமைதி ஏற்பட பயங்கரவாத அமைப்புகளுக்கான ஆதரவைத் தடுக்க வேண்டும்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 12th September 2019 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதியை ஏற்படுத்த, மற்ற நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கான ஆதரவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது.
  ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் உதவி என்ற திட்டத்தின் காலாண்டுக் கூட்டம் நியூயார்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் சையது அக்பருதீன் பங்கேற்று பேசியதாவது:
  அண்மைக் காலமாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. இதன் காரணமாக, நாட்டில் அதிபர் தேர்தலும் பாதிப்புக்குள்ளாகியது. அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, பயங்கரவாதிகள் அசம்பாவிதச் செயல்களில் ஈடுபடுவது, பேச்சுவார்த்தையின் போக்கை குலைப்பதாக உள்ளது. பயங்கரவாதத்தின் நடுவே, அமைதியையும், சமரசத்தையும் அடைய முடியாது.
  ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை வேரறுக்க அந்நாட்டு ராணுவத்தினருக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு நல்க வேண்டும். அந்நாட்டு எல்லைக்கு வெளியிலிருந்து செயல்பட்டு வரும் தலிபான், ஹக்கானி, லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, அல் காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்குக் கிடைக்கும் ஆதரவைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதுவே, ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வழியாகும். 
  இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. 
  எனவே, ஆப்கானிஸ்தானில் வாழும் மக்களின் நிலையையும், வலியையும் இந்தியா புரிந்துகொள்கிறது. ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸின் அழைப்பை இந்தியா ஆதரிக்கிறது.
  அரசமைப்புச் சட்ட அடிப்படையில் தீர்வு: வரும் 28-ஆம் தேதி புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் ஆப்கானிஸ்தான் அரசு ஈடுபட்டு வருகிறது. மக்களாட்சி அடிப்படையில், அரசமைப்புச் சட்டத்தின் உதவியுடன் எட்டப்படும் தீர்வே நாட்டின் நிலைத்தன்மையை உறுதிசெய்யும். அதை அடைய அந்நாட்டு அரசுக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.
  ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டி, மக்களின் நல்வாழ்வுக்கு வழிகோல ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடுமையான சூழலுக்கு நடுவிலும், ஆப்கானிஸ்தான் மக்கள் கடந்த 18 ஆண்டுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். அந்நாட்டில் மக்களாட்சி வலிமையடைந்து வருகிறது; மக்களுக்கான நலத்திட்டங்கள் அதிகரித்துள்ளன; சிறுபான்மையினருக்கான உரிமைகள் அதிகரித்துள்ளன; பாதுகாப்புப் படையினரின் வலிமை அதிகரித்துள்ளது; இளைஞர்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன; பிராந்திய நாடுகளுடனான தொடர்பு மேம்பட்டுள்ளது என்றார் சையது அக்பருதீன்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai