சுடச்சுட

  
  malaria

  தேசியத் தலைநகர் தில்லியில் மலேரியா நோய் பரவி வருகிறது. நிகழாண்டு இதுவரை 202 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாத முதல் வாரத்தில் மட்டும் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
  இதுதொடர்பாக தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் சார்பில் தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
  நிகழாண்டு தொடக்கம் முதல் கடந்த 7-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில்,  தில்லியில் மலேரியாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 202. இதில், இம்மாத முதல் வாரத்தில் மட்டும் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்டில் 56 பேரும், ஜூலையில் 54 பேரும், ஜூன் மாதத்தில் 35 பேரும், மே மாதம் 8 பேரும், ஏப்ரலில் ஒருவரும் பாதிக்கப்பட்டனர். இதே காலகட்டத்தில், டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 122 ஆகும். இதில், இந்த மாதத்தில் மட்டும் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆகும். நிகழாண்டு சிக்குன்குன்யாவால் இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  தில்லியில் கடந்த ஆண்டு டெங்குவால் மொத்தம் 2,798 பேர் பாதிக்கப்பட்டனர். 4 பேர் உயிரிழந்தனர். மலேரியாவால் கடந்த ஆண்டு 473 பேரும், சிக்குன்குன்யாவால் 165 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
  நிகழாண்டு டெங்குவின் தாக்கத்தை குறைப்பதற்காக, தில்லி அரசும் மாநகராட்சிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
  தில்லி அரசின் சார்பில் டெங்குவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அண்மையில் தொடங்கிவைத்தார். அதன்படி, ஒவ்வொருவரும் தினமும் 10 நிமிடங்கள் செலவிட்டு, தங்களது வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், தனது வீட்டிலும் அத்தகைய ஆய்வில் அவர் ஈடுபட்டார். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை, நவம்பர் 15-ஆம் தேதி வரை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
  இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், "கடந்த 5 ஆண்டுகளில், தில்லியில் டெங்கு நோயின் தாக்கம் 80 சதவீதம் குறைந்துள்ளது. இதனை மேலும் குறைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தில்லி அரசு, மத்திய அரசு, மாநகராட்சிகள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், இது சாத்தியமானது' என்றார்.
  டெங்குவை பரப்பும் கொசுக்கள், நன்னீரில் மட்டுமே வளரும். ஆனால், மலேரியாவை பரப்பக் கூடிய கொசுக்கள், மாசடைந்த நீரிலும் வளரக் கூடியவை. எனவே, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் இந்த நோய்கள் பரவாமல் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
  தில்லியில் நிகழாண்டு இதுவரை சுமார் 1 லட்சம் வீடுகளில் கொசுப் பெருக்கம் கண்டறியப்பட்டது. இதில், 90 ஆயிரம் வீடுகளுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

  நிகழாண்டு இதுவரை பாதிக்கப்பட்டோர்
  மலேரியா     202
  டெங்கு     122
  சிக்குன்குன்யா     40

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai