வாகன விற்பனை சரிவுக்கு ஓலா, உபர்தான் காரணமா? சொந்தமாக கார் வைத்துக் கொள்வது நல்ல ஐடியாவா?

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறை பின்னடைவை சந்தித்திருப்பதாகவும், வாகன விற்பனை சரிவடைந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வாகன விற்பனை சரிவுக்கு ஓலா, உபர்தான் காரணமா? சொந்தமாக கார் வைத்துக் கொள்வது நல்ல ஐடியாவா?

சென்னை: கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறை பின்னடைவை சந்தித்திருப்பதாகவும், வாகன விற்பனை சரிவடைந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஏற்கனவே பொருளாதார மந்தநிலை, மக்களை வாட்டும் நிலையில், அதன் எதிரொலியாக வாகன விற்பனையில் மந்தநிலை என்பது பல்வேறு துறைகளில் எதிரொலிப்பதாக அமைந்துள்ளது.

வாகன விற்பனை சரிவுக்கு ஓலா, உபர் போன்ற செல்போன் செயலிகள் மூலம் இயங்கும் வாடகைக் கார் நிறுவனங்களும் காரணமாக இருக்கின்றன என்று மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார். அதுவும் நம்ம சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 100 நாள்கள் சாதனைகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற போதுதான் அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மூன்று மாதங்களில் மத்திய அரசு மேற்கொண்ட சிறப்புத் திட்டங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பட்டியலிட்டார். அதைத் தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அவற்றுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

அப்போது அவர் வாகன விற்பனை சரிவு குறித்து பேசுகையில், வாகன விற்பனை சரிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவர் சொந்தமாக கார் வாங்கி அதற்கு மாதந்தோறும் மாதத் தவணைக் கட்டுவதற்கு பதிலாக, தேவைப்படும் போது ஓலா அல்லது உபர் கால் டாக்ஸியைப் பயன்படுத்திக் கொள்வதே எளிது என்று நினைக்கலாம். இதுபோல லட்சக்கணக்கானோர் நினைப்பதால் வாகன விற்பனை சரிவடையலாம். இதுபோல பல காரணங்கள் வாகன விற்பனை சரிவுக்குக் காரணங்களாக அமைந்துள்ள போது, இதுவும் ஒரு காரணமாக உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத நிலையிலேயே, நெட்டிசன்கள் தரப்பில் கடுமையான விமரிசினங்கள் முன் வைக்கப்பட்டன. மீம்ஸ்களுக்கும் அளவில்லை என்று சொல்லலாம்.

சரி அவர் சொன்னதை ஏன் நாம் அலசிப் பார்க்கக் கூடாது? வாருங்கள் நேரடியாகக் களத்தில் இறங்குவோம்.

  • ஒருவர் சொந்தமாக கார் வைத்திருப்பதில் என்னென்ன அசௌகரியங்கள் உள்ளன என்றால்
  • ஒரு காரை தவணை முறையில் வாங்கும் போது மாதத் தவணை கட்ட வேண்டும் என்ற நெருக்கடி.
  • சொந்தமாக கார் வைத்துக் கொண்டு அதனை கடும் போக்குவரத்து நெரிசலில் ஓட்டிச் செல்வது.
  • விதிகளை மீறும் போது அதிகப்படியான அபராதத் தொகை செலுத்த வேண்டும்.
  • தினந்தோறும் எகிறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளைப் பார்த்து மனம் பதற வேண்டும்.
  • காருக்கு இன்ஷ்யூரன்ஸ், மெயின்டெனஸ் வேறு.
  • தினமும் காலையில் காரை சுத்தம் செய்ய வேண்டும். மாதத்துக்கு அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை வாட்டர் வாஷ் செய்ய வேண்டும்.

ஆனால் இதெல்லாம் ஓலா, உபரைப் பயன்படுத்தும் போது இருக்காதுதான். ஆனால்,

  • ஒரு முக்கிய நகர்ப் பகுதியில் ஓலா, உபரைப் பயன்படுத்துகிறோம் என்றால், குறைந்தது ஒரு கிலோ மீட்டருக்கு நகரத்துக்கு ஏற்ப அது ரூ.10 முதல் ரூ.20 வரை செலவாகும்.
  • அதுவும் நாம் திட்டமிட்ட தொகைக்குள் பயணம் அமைவதில் சில அல்லது பல நேரங்களில் சிக்கல் ஏற்படும். பீக் ஹவர்ஸ்களில் பயணம் செய்வது பயணச் செலவை சில சமயம் இரண்டு அல்லது மூன்று மடங்காகக் கூட ஆக்கிவிடுகிறது.
  • சில சமயங்களில் கார் கிடைக்காமல் டென்ஷன் மட்டுமே மிஞ்சும் நிலையும் ஏற்படும்.
  • மழை மற்றும் இரவு நேரங்களில் கேப் கிடைக்காமல் திண்டாடும் நிலையோ, ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஓலா, உபர் கார்கள் வராமல் தவிர்ப்பதில் இருந்தும் தப்பிக்கலாம்.
  • மாதத்தில் 20 முதல் 25 முறை இதுபோன்ற ஓலா அல்லது உபர் கார்களை பயன்படுத்தும் போது ஒவ்வொரு முறையும் பயணக் கட்டணம் ஒன்று போல அமையாது. இதனால் பயணச் செலவை முன்கூட்டியே திட்டமிட முடியாது.

ஆனால் அதே சமயம் சொந்தமாக கார் வைத்திருப்பதில் இந்த சிக்கல்களைத் தவிர்க்கலாம். காரின் விலை அல்லது மாதத் தவணை, எரிபொருள் விலை, மெயின்டெனன்ஸ் செலவு போக நாமே சொந்தமாக காரை ஓட்டினால்  டிரைவர் சம்பளம் மிச்சமாகும். 

ஒரு மாதத்தில் 25 முறைக்கு மேல் ஓலா அல்லது உபர் காரைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், எப்படி பார்த்தாலும், கிலோ மீட்டருக்கு என்று எடுத்துக் கொண்டால் கூட சொந்தமாக கார் வைத்திருப்பது நிச்சயம் செலவு குறைவுதான். ஆனால் சொந்தமாக நாமே காரை ஓட்ட வேண்டும். ஓட்டுநர் வைத்தால் நிச்சயம் அது ஒலா, உபருக்குத்தான் மதிப்பெண்ணைக் கூட்டித் தரும்.

எனவே, காரில் பயணம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில், காரை வாங்காமல், ஓலா, உபர் போன்ற சேவை நிறுவனங்களின் காரைப் பயன்படுத்துவது செலவு என்ற அடிப்படையில் பார்த்தாலும் சரி, பெருமைக்குரிய விஷயமாகப் பார்த்தாலும் சரி சொந்தக் காருக்குத்தான் மவுசு அதிகம் என்கிறது புள்ளி விவரங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com