காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்வு

காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. தனியார் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தபோதும், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படவில்லை.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சோதனைச் சாவடியை கடந்து செல்லும் மக்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சோதனைச் சாவடியை கடந்து செல்லும் மக்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்.


காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. தனியார் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தபோதும், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படவில்லை. 
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: 
மொஹரம் பண்டிகையின் 10-ஆவது நாளையொட்டி மத ஊர்வலங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் புதன்கிழமை அந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எனினும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்காக பாதுகாப்புப் படையினர் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர். 
கரன் நகர்-பட்டமலு-லால் செளக்-டால்கேட் ஆகிய பகுதிகளில் தனியார் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆட்டோக்களும், வாடகை கார்களும் பரவலாக இயக்கத்தில் இருந்தன. 
எனினும், சந்தைப் பகுதிகள், வர்த்தக வளாகங்கள், பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை 38-ஆவது நாளாக புதன்கிழமையும் பாதிக்கப்பட்டிருந்தது. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். 
மத ஊர்வலங்களின்போது கூட்டம் சேரும் பட்சத்தில் அது வன்முறை உள்ளிட்ட சம்பவங்களுக்கு வழிவகுக்கலாம் என்று கூறி ஒவ்வொரு ஆண்டும் மொஹரம் பண்டிகையின் 8 மற்றும் 10-ஆவது நாள்களில் காஷ்மீரின் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. 
அதேபோல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகைக்காக கூட்டம் கூடும் பெரிய மசூதிகள் உள்ள பகுதிகளில் பதற்றம் மிக்க இடங்களில் இதுபோன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக பெரிய மசூதிகள் எதிலும் தொழுகைகள் நடத்தப்படவில்லை. 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5-ஆம் தேதியிலிருந்து அந்த மாநிலத்தில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன. சூழ்நிலை மேம்படுவதன் அடிப்படையில் படிப்படியாக அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன.  மாநிலம் முழுவதும் தரைவழி தொலைபேசி சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், செல்லிடப்பேசி மற்றும் இணையதளச் சேவைகளுக்கான தடை தொடர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com