கொல்கத்தா பேரணியில் பாஜகவினர் - போலீஸார் இடையே மோதல்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில், பாஜக தொண்டர்கள் சிலர் காயமடைந்தனர்.


மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில், பாஜக தொண்டர்கள் சிலர் காயமடைந்தனர்.
கொல்கத்தாவில் பாஜக தலைமையகத்தில் இருந்து சென்ட்ரல் அவென்யூ வழியாக தனியார் மின்விநியோக நிறுவனம் அமைந்துள்ள விக்டோரியா ஹவுஸ் வரை பேரணி நடத்துவதற்கு மாநில பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, பாஜக தலைமையகத்தில் இருந்து கட்சியின் மாநிலச் செயலர்கள் சயந்தன் பாசு, ராஜு பானர்ஜி, மகளிர் அணித் தலைவியும், பாஜக எம்.பி.யுமான லாக்கட் சாட்டர்ஜி உள்ளிட்டோர் விக்டோரியா ஹவுஸ் கட்டடத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றனர். சென்ட்ரல் அவென்யூ அருகே வந்தபோது, சாலையில் தடுப்புகளை வைத்து அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது தொண்டர்கள் சிலர் போலீஸாரை நோக்கி கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போலீஸார் கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். 
மேலும், அவர்கள் மீது போலீஸார் தடியடியும் நடத்தினர். அதைத் தொடர்ந்து சயந்தன் பாசு, ராஜு பானர்ஜி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில், பாஜக தொண்டர்கள் 85 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, போராட்டம் குறித்து சயந்தன் பாசு,  செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் உள்ள மற்ற தனியார் மின்விநியோக நிறுவனங்கள், அரசு மின்விநியோக நிறுவனங்கள் ஆகியவற்றைக் காட்டிலும், விக்டோரியா ஹவுஸில் இயங்கும் தனியார் நிறுவனம் அதிக கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், மாநிலத்தில் ஆளும் அரசோ, அந்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், அந்த நிறுவனத்துடன் இணைந்து பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வருகிறது என்றார்.
இதனிடையே, இந்த மோதல் சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில பாஜக தலைமையிடம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com