சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு: 3,400 பேர் வெளியேற்றம்

குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 3,400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு புதன்கிழமை வெளியேற்றப்பட்டனர்.
வதோதரா நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ரப்பர் படகு மூலம் மீட்க வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர். நாள்: புதன்கிழமை.
வதோதரா நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ரப்பர் படகு மூலம் மீட்க வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர். நாள்: புதன்கிழமை.


குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 3,400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு புதன்கிழமை வெளியேற்றப்பட்டனர்.

குஜராத் மாநிலத்தில் நிகழாண்டின் இப்பருவத்தில் இதுவரை 116.59 சதவீதம் மழை பெய்துள்ளது. இந்நிலையில் குஜராத்தின் தெற்குப் பகுதியிலும், செளராஷ்டிரா பகுதியிலும் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால், சர்தார் சரோவர் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், நர்மதை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நர்மதை மாவட்டத்தில் உள்ள கேவடியா என்னுமிடத்தில், புதன்கிழமை மதிய நிலவரப்படி சரோவர் அணையின் நீர்மட்டம் 136.92 மீட்டராக இருந்தது. இதனால், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஜகாடியா, பரூச், அங்கிலேஷ்வர் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 3,400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர் என்றார் அவர்.

இதனிடையே, அணையில் இருந்து வினாடிக்கு 8 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுவதாக, அணையின் தலைமைப் பொறியாளர் பி.சி.வியாஸ் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அணைக்கு வினாடிக்கு 8.5 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது; 8 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. புதன்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 139.92 மீட்டரை எட்டியுள்ளது. இம்மாத இறுதிக்குள் அணையின் முழு கொள்ளளவான 138.68 மீட்டர் உயரத்தை நீர்மட்டம் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர். அணையின் மொத்தமுள்ள 30 கதவுகளில் 23 கதவுகள் தண்ணீர் வெளியேற்றத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு, கடந்த 2017-இல் அணை முழு கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com