துறவி ரவிதாஸர் கோயில் நிலத்தை விடுவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கேஜரிவால் கடிதம்

துறவி ரவிதாஸர் கோயில் நிலத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய அரசுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
துறவி ரவிதாஸர் கோயில் நிலத்தை விடுவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கேஜரிவால் கடிதம்


துறவி ரவிதாஸர் கோயில் நிலத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய அரசுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஹர்தீப் சிங் புரிக்கு முதல்வர் கேஜரிவால் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தில்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ) தில்லி துக்ளகாபாத் கிராமத்தில் உள்ள துறவி ரவிதாஸர் கோயிலை கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி இடித்தது. அந்த கோயில் இடிக்கப்பட்டது, கோடிக்கணக்கான மக்களின் உணர்வை புண்படுத்திவிட்டது. துறவி ரவிதாஸர் ஒரு போற்றத்தக்க துறவி, அவர் தலித் சமூகத்திற்கு மட்டுமானவர் அல்ல. அனைத்து சமூகத்திற்குமானவர். அவரது போதனைகள் ஐந்நூறு ஆண்டுகளாக மக்களின் தலைமுறைகளை அதிகராமிக்கவர்களாகவும், மேம்படுத்தவும் செய்து வருகிறது.
தில்லியில் ரவிதாஸர் கோயில் இடிக்கப்பட்ட போதிலும் அந்த கோயிலை மீட்பதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. இந்த கோயில் நிலம் டிடிஏ வசம் இருப்பதால், அதை விடுவிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மட்டுமே மேற்கொள்ள முடியும். இந்த நிலமானது டிடிஏவின் கட்டுப்பாட்டில் உள்ள வனப் பகுதியாகும். எனவே, நிலத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கையை டிடிஏ மேற்கொள்ள வேண்டும். நிலத்தை விடுவிக்கும் முன்மொழிவை சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகத்திடம் தில்லி அரசு மூலம் டிடிஏ அளிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை தில்லி அரசு மேற்கொள்ளத் தயாராக உள்ளது. கோயிலை நடத்தி வரும் சொஸைட்டியிடம் நிலத்தை அளிக்க மத்திய அரசு முன்வந்தால், கோயிலின் மறுகட்டுமானத்தை தில்லி அரசு மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளும் என்று கடிதத்தில் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
துறவி குரு ரவிதாஸர், 15-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பிரபலமாக இருந்த பக்தி மார்க்கத்தின் முக்கியத் துறவிகளில் இவரும் ஒருவராவார். சமூக, மத சீர்திருத்தவாதியாக இருந்த இவர்,  பஞ்சாப் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். வட இந்தியாவில் இவரை லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர்கின்றனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் இவரை தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தில்லி துக்ளாபாத்தில் உள்ள 15 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குரு ரவிதாஸர் கோயில் ஒன்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தில்லி வளர்ச்சி ஆணையத்தால் (டிடிஏ) அண்மையில் இடிக்கப்பட்டது. இதற்கு தில்லி, பஞ்சாபில் எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவும், ஆம் ஆத்மியும் பரஸ்பரம் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com