பயங்கரவாதத்தின் ஆணிவேர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தின் ஆணிவேராக பாகிஸ்தான் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.
பயங்கரவாதத்தின் ஆணிவேர் பாகிஸ்தான்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு


பயங்கரவாதத்தின் ஆணிவேராக பாகிஸ்தான் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.
உலகை அச்சுறுத்தும் சக்தியாக பயங்கரவாதம் வளர்ந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா நகரில் புதன்கிழமை நடைபெற்ற தூய்மையே சேவை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, துப்புரவுத் தொழிலில் ஈடுபடும் 25 பெண்களுடன் அவர் கலந்துரையாடினர். அன்றாடம் துப்புரவுப் பணியின்போது சேகரிக்கப்படும் நெகிழிப் பொருள்கள் குறித்து அவர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பின்னர் அவர் உரையாற்றியதாவது:

நூறு ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவை நிகழ்த்தினார். அதன் மூலம், இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் உலகமே அறிந்துகொண்டது. துரதிருஷ்டவசமாக 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில், அமெரிக்காவில் மாபெரும் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. தற்போது, பயங்கரவாதம் உலக நாடுகளை அச்சுறுத்தும் சக்தியாக மாறிவிட்டது. 

உலக நாடுகள் பலவற்றிலும் பயங்கரவாதம் பரவியுள்ளது. பயங்கரவாதத்துக்கான ஆணிவேர் அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) காணப்படுகிறது. அங்கு பயங்கரவாத அமைப்புகள் தழைத்தோங்கி வருகின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்திலும் அந்த நடவடிக்கைகள் தொடரும். பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. 
பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களை இந்தியா கடுமையாக்கி வருகிறது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவும், அடைக்கலமும் அளிக்கும் நாடுகளுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். நோய்க்கு எதிராகவும், மாசுபாட்டுக்கு எதிராகவும், பயங்கரவாதத்துக்கு எதிராகவும் மக்கள் ஒன்றாக இணைய வேண்டும். 

தவறான கருத்துகள்: ஓம், பசு என்ற வார்த்தைகளைக் கேட்டாலே நாட்டில் சிலருக்கு அச்சம் ஏற்பட்டுவிடுகிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. நாடு 16-ஆம் நூற்றாண்டுக்குச் சென்றுவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர். நாட்டை நிலைகுலையச் செய்ய நினைப்பவர்களே இதுபோன்ற கருத்துகளைக் கொண்டுள்ளனர்.

நெகிழிப் பயன்பாட்டை அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் நிறுத்த வேண்டும்: நெகிழிப் பொருள்களால் கால்நடைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. எனவே, அவற்றின் பயன்பாட்டை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். 

முக்கியமாக, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு, தூக்கியெறியப்படும் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை வரும் அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் அறவே நிறுத்த வேண்டும். 
இதற்காக, சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை தகுந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார் பிரதமர் மோடி.
ஆச்சரியமளிக்கிறது: கால்நடைகளுக்கான தடுப்பூசித் திட்ட தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், விவசாயிகளின் முக்கியப் பிரச்னையாக விளங்கிய கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் குறித்து முந்தைய அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது ஆச்சரியமளிக்கிறது. கால்நடைகளில் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்காகத் தற்போது தொடங்கப்பட்டுள்ள தடுப்பூசித் திட்டம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான திட்டங்களில் ஒன்றாகும் என்றார்.

பின்னர், விவசாயிகளைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, கால்நடைகளுக்கான தேசிய செயற்கைக் கருவூட்டல் திட்டத்தையும் தொடக்கி வைத்தார். 
இந்த நிகழ்ச்சியில் மத்திய கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

50 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி
கால்நடைகளில் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பூசித் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் ஆடு, மாடு, செம்மறியாடு, எருமை, பன்றி உள்ளிட்ட 50 கோடி கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடப்படவுள்ளது. 
வரும் 2025-ஆம் ஆண்டுகளுக்குள் கால்நடைகளில் ஏற்படும் புரூசெல்லா நோயைக் கட்டுப்படுத்துவதும், வரும் 2030-ஆம் ஆண்டுகளுக்குள் அந்த நோயை முற்றிலுமாக ஒழிப்பதுமே தடுப்பூசித் திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக மத்திய அரசு ரூ.12,652 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com