போராட்ட அறிவிப்பு எதிரொலி: வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோர் புதன்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு.


ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோர் புதன்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 

ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் தாக்கப்படுவதாக அக்கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்நாடு பகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் பல வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தியதாகவும், அதனால், ஆத்மகூரு கிராமத்தில் வசித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 120 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி, தெலுங்கு தேசம் கட்சி அமைத்த நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதையடுத்து ஆத்மகூரு கிராமத்தில் இருந்து விரட்டப்பட்ட மக்களுக்கு நியாயம் பெற்றுத் தருவதாகவும், அதற்காக, ஆத்மகூரு கிராமத்தை நோக்கி செல்வோம் (சலோ ஆத்மகூரு) என்றும் கூறி புதன்கிழமை போராட்டம் நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், அமராவதியில் உள்ள வீட்டில் இருந்து போராட்டம் நடத்தும் பகுதிக்கு புதன்கிழமை காலை செல்ல முயன்ற சந்திரபாபு நாயுடு வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டார். அதையடுத்து அவரும், அவரது மகனும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அவரது வீட்டைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமன்றி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக மாநில காவல் துறை டிஜிபி டி. கெளதம் சவாங்க் வெளியிட்ட அறிக்கையில், சந்திரபாபு நாயுடுவின் அறிவிப்பாலும், செயல்களாலும் பல்நாடு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் பொருட்டு அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

வரலாற்றில் கருப்பு தினம்: வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறுகையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் பல தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினரின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெறாத கொடுமை இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இவை ஆளும் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகின்றன. 

ஆளும் கட்சி மற்றும் போலீஸாரின் வன்முறைப் போக்கினால் ஆத்மகூரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேறினர். நாங்கள் அமைத்துள்ள முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சொந்தக் கிராமத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டியது எனது கடமை. அவர்களுக்கு அமைதியான வாழ்க்கையை அமைத்துத் தருவேன். என்னுடைய முயற்சியை  கைவிடப் போவதில்லை. என்னை அவர்கள் எவ்வளவு நாள்கள் வீட்டுக் காவலில் வைக்க முடியும். விடுவித்த உடனே, நான் அந்த மக்களுக்காக மீண்டும் போராடச் செல்வேன் என்றார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு: ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வன்முறைப் போக்கினால் ஆத்மகூரு கிராம மக்கள் வெளியேறியதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டும் நிலையில், இதற்கு ஆளும் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. 

குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் உள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டின் பிரதான வாயிலை பூட்டிய காவல் துறை அதிகாரிகள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com