சுடச்சுட

  
  shoot


  இந்தியா சர்வதேசத் தரத்திலான, குண்டு துளைக்காத கவச உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளதாக இந்திய தரச் சான்று அமைப்பான பி.ஐ.எஸ். தெரிவித்துள்ளது.
  இது தொடர்பாக தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு இடையே, பி.ஐ.எஸ். அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறுகையில்
  அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக சொந்தமான தேசியத் தரத்தில் புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகளை தயாரிக்கும் நாடு இந்தியா ஆகும். இவை 360 டிகிரி கோணத்தில் பாதுகாப்பு அளிக்கின்றன என்று தெரிவித்தார்.
  பி.ஐ.எஸ். அமைப்பின் துணை இயக்குநர் ராஜேஷ் பஜாஜ் கூறுகையில் இந்தியாவில் பி.ஐ.எஸ். தரத்தின்படி புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படுவதோடு 100 நாடுகளில் விற்பனையும் செய்யப்படுகின்றன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்து தேசியத் தரத்தை நாங்கள் நிர்ணயித்தோம். அது சர்வதேசத் தரத்தில் உள்ளது என்றார்.
  பி.ஐ.எஸ். அமைப்பில் விஞ்ஞானியான ஜே.கே.குப்தா கூறியதாவது:
  புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகளுக்கான தர நிர்ணய விதிகள் இல்லாத நேரத்தில் தரமான ஜாக்கெட்டுகளை நம்மால் கொள்முதல் செய்ய முடியவில்லை. எனவே  இதற்கான தர நிர்ணய விதிகளை உருவாக்குமாறு முப்படைகளும் நீண்ட காலமாகக் கோரி வந்தன. அதன்படி, பிரதமர் அலுவலகம் மற்றும் நீதி ஆயோக் அமைப்பின் உத்தரவைத் தொடர்ந்து புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகளுக்கான தர நிர்ணய விதிகளை பி.ஐ.எஸ். கடந்த 2018 டிசம்பர் மாதத்தில் உருவாக்கியது.
  அந்த விதிகள் அதே மாதத்தில் வெளியிடப்பட்டன. இப்போது அனைவரும் அந்த விதிகளை அமல்படுதத்தி வருகின்றனர். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்படி  உலகத் தரத்திலான வசதிகளும் வடிவமைப்புத் திறன்களும் நம்மிடம் உள்ளன. ஐரோப்பா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாம் புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகளை வடிவமைத்து வருகிறோம் .
  சென்னை ஆவடியில் உள்ள மெதானி, ஆர்டினன்ஸ் ஃபேக்டரி எனப்படும் ஆயுதத் தொழிற்சாலை ஆகிய  2 பொதுத்துறை நிறுவனங்களும், சில தனியார்  நிறுவனங்களும் புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகளை தர நிர்ணய விதிகளின்படி தயாரிக்கின்றன. ஹரியாணா மாநிலம் பல்வாலில் உள்ள எஸ்.என்.பி.பி., 
  ஃபரீதாபாதில் உள்ள ஸ்டார்வைர், உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ள எம்.கே.யூ. ஆகியவையே இத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களாகும்.
  உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களான இவை ஏற்கெனவே முப்படைகளுக்கும் 1.86 லட்சம் ஜாக்கெட்டுகளைத் தயாரித்து வழங்கியுள்ளன. முப்படைகளின் கூடுதல் தேவைக்காக ஒப்பந்தப்புள்ளி வெளியிடும் நடைமுறைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
  படைவீரர்களின் தேவைகளுக்குப் பொருந்தும் வகையில் பல்வேறு அளவுகளில் ஜாக்கெட்டுகள் தயாரிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும்,  நொடிக்கு 700 மீட்டர் வேகத்தில் பாய்ந்து வரக் கூடிய ஏகே-47 போன்ற கடுமையான ஸ்டீல் தோட்டாக்களிடம் இருந்தும் பாதுகாப்பு வழங்குவதற்காகவும் கடினமான தரக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
  அண்மையில் நீதி ஆயோக் அமைப்பின்  உறுப்பினர் வி.கே.சாரஸ்வத் கூறுகையில் இந்தியாவின் முப்படைகளுக்கும் 3 லட்சம் புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகள் தேவைப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai