சுடச்சுட

  

  வதேரா வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கோரிக்கை

  By DIN  |   Published on : 13th September 2019 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  robert-vadera


  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.
  பிரிட்டன் தலைநகர் லண்டனின் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள சொத்து ஒன்றை வாங்கியதில் முறைகேடு செய்ததாக, கருப்புப் பண மோசடி வழக்கில் வதேரா சிக்கியுள்ளார். இதுதொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறது.
  இந்த வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள அவர், தங்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என்று அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் அனுமதியுடன் அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் கடந்த ஜூன் மாதம் சென்றார். 
  இருப்பினும் அவர் பிரிட்டன் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
  இந்நிலையில், வியாபார விஷயமாக, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினுக்கு செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை சென்று வருவதற்கு அனுமதி கோரி, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் வதேரா கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார்.
  இந்த மனு மீதான விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, வதேரா ஸ்பெயின் செல்வதற்கு அனுமதி அளித்தால், அவர் வழக்கில் தொடர்புடையவர்களைச் சந்தித்து சாட்சிகளைக் கலைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது. 
  எனவே, அவர் ஸ்பெயினுக்கும் இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது. 
  அதற்கு வதேரா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.டி.எஸ். துளசி, அமலாக்கத் துறையின் வாதம் அடிப்படை ஆதாரமற்றது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  வதேராவின் மனு மீதான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பிப்பதாக அறிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai