சுடச்சுட

  

  வாய்ப்பை தவறாகப் பயன்படுத்துகிறது பாஜக: சோனியா காந்தி விமர்சனம்

  By DIN  |   Published on : 13th September 2019 11:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sonia gandhi accuse bjp


  மக்களவைத் தேர்தல் வெற்றியின் மூலம் தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பாஜக மிகத் தவறாகவும், ஆபத்தான வகையிலும் பயன்படுத்தி வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். 
  மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் விமரிசையாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
  சோனியா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலர்கள், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
  பிரியங்காவும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில், பாஜக தலைமையிலான மத்திய அரசை சோனியா கடுமையாக விமர்சித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது அவர் பேசியதாவது: 
  காங்கிரஸ் கட்சியின் உறுதித் தன்மையையும், எதிர்ப்புத் திறனையும் பாஜக சோதிக்கிறது. அவற்றை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் போராட்டக் கொள்கையுடன் காங்கிரஸ் செயல்பட வேண்டும். அதன் மூலம் பாஜகவின் உண்மை முகத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 
  மோடி தலைமையிலான அரசிடம் ஜனநாயகம் சிக்கிக் கொண்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வெற்றியின் மூலம் கிடைத்துள்ள வாய்ப்பை பாஜக மிகத் தவறாகவும், ஆபத்தான முறையிலும் பயன்படுத்தி வருகிறது. 
  நமது நாட்டுப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. அதை சமாளிப்பதில் அரசின் முயற்சிகள் தோல்வியடைவதால், மக்களின் நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது. பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்வதில் தனது தோல்வியை மறைக்கும் விதமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஈடுபடுகிறது. 
  மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், அம்பேத்கர் போன்ற பெருந்தலைவர்களின் கொள்கை அடையாளங்களை பாஜக அரசு தனது சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறது. அவர்களின் உண்மையான கருத்துகளை திரித்து, தனது கொடிய கொள்கைகளுக்காக தவறாகப் பயன்படுத்துகிறது. இதற்கு எதிராக காங்கிரஸ் போராட வேண்டும் என்று இந்த நாடு எதிர்பார்க்கிறது. சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும், நகரங்களிலும் நாம் தெருவில் இறங்கிப் போராட வேண்டும். மக்களை நேரடியாக நாம் சந்திக்க வேண்டும். 
  காங்கிரஸுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் நபர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள உதவும் நேரம் இது. கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் தங்களது சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 3 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், கட்சியின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு போட்டியிட்டால் நாம் இழந்த நல்ல நிலையை மீண்டும் அடைவோம் என்று சோனியா காந்தி பேசினார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai