அமலாக்கத் துறை வழக்கில் ப.சிதம்பரம் சரணடைய விரும்பிய மனு: தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு
அமலாக்கத் துறை வழக்கில் ப.சிதம்பரம் சரணடைய விரும்பிய மனு: தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவு


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிடவுள்ளது.
இந்த மனு தொடர்பான விசாரணை, சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் வழக்குரைஞர் நிதீஷ் ராணா ஆகியோர் வாதிட்டதாவது:
இந்த வழக்கில் மனுதாரரை (ப.சிதம்பரம்) கைது செய்து விசாரிக்க வேண்டியது அவசியமானது. அவரைக் கைது செய்து விசாரிப்பதற்கு முன்பாக, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. சிபிஐ பதிவு செய்த வழக்கில் மனுதாரர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு தொடர்பான சாட்சியங்களை அழிக்கும் நிலையில் அவர் இல்லை. எனவே, அவரை அமலாக்கத் துறை உரிய நேரத்தில் கைது செய்யும்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை எப்போது விசாரிக்க வேண்டுமென்று விசாரணை அமைப்பே முடிவு செய்யும். குற்றஞ்சாட்டப்பட்டவர் விசாரணை அமைப்பை வழிநடத்த முடியாது. இந்த மனுவை ஏற்றுக்கொண்டால், ஒவ்வொரு குற்றவாளியும், விசாரணை அமைப்பின் சுதந்திரத்தில் தலையிட முற்படும் சூழல் உருவாகும். இது தவறான முன்னுதாரணமாக அமையும். 
தற்போது மனுதாரரைக் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்தச் சூழல் வரும்போது, நீதிமன்றத்தை அமலாக்கத் துறை நாடும். எனவே, இந்த வழக்கில் சரணடைய விரும்பிய ப.சிதம்பரத்தின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். 
திட்டமிட்ட சூழ்ச்சி: ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் மற்றும் வழக்குரைஞர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வாதிட்டதாவது:
அமலாக்கத் துறையின் வாதம் நேர்மையற்ற முறையில் உள்ளது. மனுதாரரை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்க அமலாக்கத் துறை திட்டம் தீட்டுகிறது. கடந்த மாதம் 20, 21 ஆகிய தேதிகளில் அமலாக்கத் துறையினர் மனுதாரரைக் கைது செய்ய முயற்சித்தனர். தற்போது, மனுதாரரே சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளபோதும், அவரைக் கைது செய்ய அமலாக்கத் துறையினர் மறுத்து வருகின்றனர். இது திட்டமிட்ட சூழ்ச்சியாகும். 
இந்த வழக்கு தொடர்பாக 6 பேரை விசாரிக்க வேண்டியுள்ளதாக அமலாக்கத் துறை வேறெங்கும் குறிப்பிடவில்லை. இந்த வழக்கில் மனுதாரர் எப்போது வேண்டுமானாலும் சரணடையலாம். அது அவருடைய உரிமை. எனவே, மனுதாரரின் சரணடையும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்த மனு மீது வெள்ளிக்கிழமை உத்தரவிடப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com