குல்பூஷண் ஜாதவை மீண்டும் சந்திக்க அனுமதிக்க மாட்டோம்: பாகிஸ்தான்

குல்பூஷண் ஜாதவை இந்தியா சார்பில் மீண்டும் யாரும் சந்திக்க அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தரப்பு கூறியுள்ளது. முன்னதாக, கடந்த 2-ஆம் தேதி ஜாதவை, இந்திய துணைத் தூதர் சந்தித்துப் பேசினார்
குல்பூஷண் ஜாதவை மீண்டும் சந்திக்க அனுமதிக்க மாட்டோம்: பாகிஸ்தான்


குல்பூஷண் ஜாதவை இந்தியா சார்பில் மீண்டும் யாரும் சந்திக்க அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தரப்பு கூறியுள்ளது. முன்னதாக, கடந்த 2-ஆம் தேதி ஜாதவை, இந்திய துணைத் தூதர் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவை (49) பாகிஸ்தான் அதிகாரிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி கைது செய்தனர். அவரை ஈரானில் இருந்து கடத்தி வந்து பாகிஸ்தான் கைது செய்ததாக இந்தியா குற்றம்சாட்டியது.
பாகிஸ்தானுக்கு எதிராக அவர் சதி வேலையில் ஈடுபட்டதாகவும், அவர் இந்திய உளவாளி என்றும் குற்றம்சாட்டி தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த அந்நாட்டு ராணுவ நீதிமன்றம், குல்பூஷணுக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2017-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவருக்கு இந்திய தூதரக உதவி உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 2-ஆம் தேதி இந்திய துணைத் தூதர் கெளரவ் அலுவாலியா, குல்பூஷண் ஜாதவை சுமார் 2 மணி நேரம் சந்தித்துப் பேசினார். அப்போது, பாகிஸ்தான் அதிகாரிகளும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து தில்லியில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், பாகிஸ்தான் அரசால் குல்பூஷண் ஜாதவ் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளது தெரிகிறது. பாகிஸ்தான் கூறும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பேச வேண்டும் என்று அவருக்கு வலியுறுத்தப்பட்டது போல் தோன்றுகிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது பைசல், குல்பூஷண் ஜாதவை இந்தியத் தரப்பினர் மீண்டும் சந்தித்த அனுமதிக்க மாட்டோம் என்றார்.
இந்தியா கருத்து: பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், சர்வதேச நீதிமன்றம் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதனை முழுமையாக அமல்படுத்தும் வகையில் இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளும். எனவே, குல்பூஷண் ஜாதவுக்கு இந்தியத் தூதரக உதவிகள் முழுமையாக அளிக்கப்பட வேண்டுமென்று பாகிஸ்தான் தரப்பை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com