நீதிபதிகள் பணியிட மாற்றம் ஏன்? விவரம் அளிக்கத் தயார் 

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்தது குறித்து விவரம் அளிக்கத் தயாராக உள்ளோம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது
நீதிபதிகள் பணியிட மாற்றம் ஏன்? விவரம் அளிக்கத் தயார் 


உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்தது குறித்து விவரம் அளிக்கத் தயாராக உள்ளோம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. மேலும், இந்த பணியிட மாற்ற பரிந்துரைகளுக்கு வலுவான காரணங்கள் உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹிலராமாணீ, மேகாலய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  இதற்கான பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் வழங்கியது. இந்தப் பணியிட மாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தஹிலராமாணீ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்ய நீதிபதி தஹிலராமாணீ முடிவு செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜிநாமா இப்போது வரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இடமாற்ற உத்தரவைத் திரும்ப பெற வலியுறுத்தி நாட்டின் பல்வேறு வழக்குரைஞர்கள் சங்கங்களின் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  நீதிபதி வி.கே.தஹிலராமாணீ முன்னர் பணியாற்றிய மும்பை உயர்நீதிமன்றத்திலும் வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த பணியிட மாற்றம் குறித்து, தேவைப்பட்டால் விவரம் அளிக்க தயாராக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்ற செயலர் சஞ்சீவ் எஸ். கல்கோங்கர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்யுமாறு பரிந்துரைகள் அளித்தது குறித்து ஊடகங்களில் பல போலியான தகவல்கள் வெளியாகின்றன. வலுவான காரணங்கள் இருந்ததன் அடிப்படையில்தான் இந்தப் பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. பணியிட மாற்றம் செய்ததற்கான காரணங்களை வெளியிட வேண்டுமென்றால், அதை வெளியிடுவதில் உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அந்த விவரத்தை அளிப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தீவிர யோசனை மற்றும் ஆலோசனைக்குப் பிறகே ஒவ்வொரு பரிந்துரையும் அளிக்கப்படுகிறது. கொலீஜியத்தினால் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்ட பின்னரே இந்த பரிந்துரைகள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com