விமானத் துறையில் ஊழல்: 3 பேரை கைது செய்தது சிபிஐ

விமானத் துறையில் அந்நியச் செலாவணி விதிமுறை மீறல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அத்துறையின் ஆலோசகர் தீபக் தல்வாரின் அட்வான்டேஜ் இந்தியா நிறுவனத்துக்கு தொடர்புடைய மூன்று பேரை மத்திய புலனாய்வு துறையினர்


விமானத் துறையில் அந்நியச் செலாவணி விதிமுறை மீறல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அத்துறையின் ஆலோசகர் தீபக் தல்வாரின் அட்வான்டேஜ் இந்தியா நிறுவனத்துக்கு தொடர்புடைய மூன்று பேரை மத்திய புலனாய்வு துறையினர் (சி.பி.ஐ) கைது செய்துள்ளனர்.
விமானத் துறை ஆலோசகர் தீபக் தல்வாருக்கு சொந்தமான அரசு சாரா நிறுவனமான அட்வான்டேஜ் இந்தியா வெளிநாட்டிலிருந்து அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி ரூ.90 கோடியை பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக , சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தல்வாருக்கு மிகவும் நெருங்கிய உதவியாளராக கருதப்படும் யஷ்மீன் கபூர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். தற்போது, சிபிஐ பிடியில் உள்ள அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையும் இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
விதிமுறைகளை மீறி வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து ரூ.90.72 கோடி நிதியை பெற்றதாக அட்வான்டேஜ் இந்தியா மீது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்.சி.ஆர்.ஏ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்த நிலையில், தருண் கபூர், பிரதீப் சூட் மற்றும் ஜதீன் வதேரா என்ற மேலும் மூவர் இந்த வழக்கு சம்பந்தமாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்படுவர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com