Enable Javscript for better performance
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: சிறப்பு நீதிபதியின் பணிக்காலம் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாபர் மசூதி இடிப்பு வழக்கு: சிறப்பு நீதிபதியின் பணிக்காலம் நீட்டிப்பு

    By DIN  |   Published on : 14th September 2019 03:21 AM  |   அ+அ அ-   |    |  


    பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிபதியின் பணிக்காலத்தை நீட்டிக்க உத்தரப் பிரேதச அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
    இச்சம்பவம் நிகழ்ந்து 26 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும், விசாரணை முடிவுக்கு வராத காரணத்தினால் உச்சநீதிமன்றம் அதிருப்தி அடைந்தது. இந்த வழக்கில் விரைந்து நீதி கிடைக்கச் செய்யும் நோக்கில், வழக்கை தினந்தோறும் விசாரித்து இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்க வேண்டும் எனக் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
    இதையடுத்து, வழக்கின் விசாரணை உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னெளவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. உச்சநீதிமன்றம் அளித்த காலஅவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், செப்டம்பர் 30-ஆம் தேதியுடன், தன்னுடைய பணிக்காலம் முடிவுக்கு வர இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை நிறைவுசெய்ய 6 மாதங்கள் கூடுதல் அவகாசம் அளிக்குமாறும் அவர் கோரியிருந்தார்.
    இதை ஆராய்ந்த நீதிமன்றம், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் சிபிஐ சிறப்பு நீதிபதி முடிக்க வேண்டும். அதற்கடுத்த 3 மாதத்துக்குள் வழக்கின் தீர்ப்பை அவர் வழங்க வேண்டும். இதற்கேற்ற வகையில் சிறப்பு நீதிபதியின் பணிக்காலத்தை நீட்டித்து, உத்தரப் பிரதேச அரசு 4 வாரங்களுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கடந்த மாதம் தெரிவித்திருந்தது. 
    வழக்கு முடித்துவைப்பு: இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலர் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இதை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தது. அப்போது, உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஐஸ்வர்யா பாடி, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை, சிறப்பு நீதிபதியின் பணிக்காலத்தை நீட்டித்துள்ளோம். இது தொடர்பாக, மாநில ஆளுநர் ஆணை பிறப்பித்துள்ளார் என்றார். 
    இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக, மாநில தலைமைச் செயலரின் பிரமாணப் பத்திரத்தையும், ஆளுநரின் ஆணையையும் ஆய்வு செய்தோம். சிறப்பு நீதிபதியின் பணிக்காலத்தை நீட்டிக்க மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது திருப்தியளிக்கிறது என்று கூறி, இந்த வழக்கை முடித்துவைத்தனர்.
    முன்னதாக, இது தொடர்பான விசாரணையின்போது, பாபர் மசூதி இடிப்பு வழக்கை முழுமையாக விசாரித்து தீர்ப்பளிக்கும் நோக்கில் மட்டுமே சிபிஐ சிறப்பு நீதிபதிக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படுகிறது என்றும், பணிநீட்டிப்புக் காலத்தில், அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் அவர் செயல்படுவார் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது 
    குறிப்பிடத்தக்கது.


     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp