டிவிட்டர் மொழிப் போர்: தேசிய அளவில் டிரெண்டாகும் ஹிந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக்

இந்தியாவின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று அமித்ஷா கருத்து தெரிவித்துள்ள நிலையில், ஹிந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியாவின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று அமித்ஷா கருத்து தெரிவித்துள்ள நிலையில், ஹிந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகின்றன. 

ஹிந்தி மொழியைக் கொண்டாடும் வகையில் 'ஹிந்தி திவாஸ்' என்று ஹிந்தி தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், 

"இந்தியா பல மொழி பேசும் நாடு. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மகத்துவம் உண்டு. ஆனால், நாடு முழுவதும் ஒரே மொழி பேசும் போது, சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். அதுமட்டுமில்லாமல், அதிக மக்களால் பேசப்படும் மொழியாகவும் ஹிந்து மாறும்" என்று குறிப்பிட்டிருந்தார். 

இதைத்தொடர்ந்து, ஹிந்தி தினம் தொடர்பான நிகழ்விலும் பங்கேற்றுப் பேசிய அவர், 

"பல்வேறு மொழிகள் இருப்பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலம் என்பதை நான் நம்புகிறேன். இருப்பினும், நமது நாட்டுக்கு ஒற்றை மொழி தேவைப்படுகிறது. இதனால், அந்நிய மொழிகளால் இங்கே நுழைய முடியாது. இதனால்தான் நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகள் இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று எண்ணினர்" என்றார்.

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றன. 

இதுதவிர, வழக்கம்போல் டிவிட்டரிலும் தற்போது மொழிப் போர் தொடங்கியுள்ளது. இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹிந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. ஹிந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக்குகளே தேசிய அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. 3-வது இடத்தில் #தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதனால், ஹிந்தி தினத்தை கொண்டாடும் ஹிந்தி திவாஸ் ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com