உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: மத்திய அரசின் சீராய்வு மனு புதிய அமர்வுக்கு மாற்றம்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி., எஸ்.டி.) வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக


தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி., எஸ்.டி.) வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவின் விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படும் நபர்களை விசாரணையின்றி கைது செய்வதற்குத் தடை விதித்தும், கைதாகும் நபர்கள் ஜாமீன் பெறும் வகையிலும் சட்டத்தின் விதிகளைத் திருத்தி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. 
இந்தச் சட்டத்தின் மூலம் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. 
இதனிடையே, குற்றம் சாட்டப்படும் நபர்களை விசாரணையின்றி கைது செய்யவும், அவர்கள் ஜாமீன் பெற முடியாத வகையிலும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு சில 
திருத்தங்களை மேற்கொண்டது. இந்தப் புதிய சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 
ஆனால், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்ததாகவும், இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறி, உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தது. 
இதைத் தொடர்ந்து, மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதன் மீதான உத்தரவை கடந்த மே மாதம் ஒத்திவைத்தது. இந்த மனு தொடர்பான உத்தரவை நீதிபதிகள் யு.யு. லலித், அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்தது. 
அப்போது, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுகிறோம். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை புதிய அமர்வு முன் அடுத்த வாரம் தொடங்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com