வைகோவின் ஆள்கொணர்வு மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

ஜம்மு-காஷ்மீர் மாநில ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று வைகோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஜம்மு-காஷ்மீர் மாநில ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று வைகோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பல்வேறு முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதில், அம்மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதனிடையே, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா மாநாட்டில் பங்கேற்க ஃபரூக் அப்துல்லாவை மதிமுக பொதுச் செயலர் வைகோ அழைப்பு விடுத்திருந்தார். இதில் பங்கேற்பதாகவும் ஃபரூக் அப்துல்லா, வைகோவுக்கு உறுதியளித்துள்ளார். 

இந்நிலையில், ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.  

இதுதொடர்பாக வைகோ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், 

"மதிமுக சார்பில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி (இன்று) பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா மாநாடு சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் ஃபரூக் அப்துல்லா பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தார். அவரும் பங்கேற்பதற்காக சம்மதித்திருந்தார். ஆனால், ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஃபரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஃபரூக் அப்துல்லாவை சென்னை வர அனுமதிக்குமாறு ஆகஸ்ட் 29-ஆம் தேதி உரிய துறையின் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்துக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
 
இது சட்டவிரோதமாகும். எனவே, ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா அமர்வு முன் வைகோ தரப்பில் கடந்த வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் எனத் தெரிவித்தனர்.
 
இதனால், இந்த மனு உடனடியாக விசாரணைக்கு வரவில்லை. 

இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை (திங்கள்கிழமை) விசாரணைக்கு வரவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதவிர, ஜம்மு-காஷ்மீர் தொடர்பான மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com