அமித் ஷா பேச்சு: காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

"ஹிந்தி மொழி நாட்டை ஒருங்கிணைக்கும்' என்று அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமித் ஷா பேச்சு: காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

"ஹிந்தி மொழி நாட்டை ஒருங்கிணைக்கும்' என்று அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஹிந்தி தின நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, "நாடு முழுவதும் பொதுவான மொழி இருக்க வேண்டியது அவசியம்; நாட்டில் பெரும்பாலான மக்கள் பேசும் ஹிந்தி மொழியால் ஒட்டுமொத்த நாட்டையும் ஒருங்கிணைக்க முடியும்' என்று தெரிவித்தார். 
இது தொடர்பாக தில்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
ஹிந்தி மொழி அலுவலக மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அத்துடன் சேர்த்து 22 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, மும்மொழிக் கொள்கை விவாதிக்கப்பட்டது. அந்தப் பிரச்னைக்கு தெளிவான தீர்வை ஜவாஹார்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் எடுத்துவிட்டார்கள்.  மொழி சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான விஷயங்களை மீண்டும் பேசி சர்ச்சையை எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. 3 மொழி கொள்கை குறித்து தற்போது பேசி நாட்டில் பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம். நானும் ஹிந்தி பேசுபவன்தான். ஆனால் நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்: "அமித் ஷா தெரிவித்த கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை பரப்புவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. ஹிந்தி திணிப்பை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த கொள்கை நமது நாட்டைப் பிரித்துவிடும்' என்று இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
மம்தா கருத்து: நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும், கலாசாரத்துக்கும் மக்கள் மரியாதையளிக்க வேண்டும்; ஆனால் தாய்மொழியை அழித்து விட்டு மற்ற மொழிகளை உயர்த்தக்கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மம்தா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "நாட்டு மக்கள் அனைவருக்கும் ஹிந்தி தின வாழ்த்துகள். அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதையை நாம் அளிக்க வேண்டும். நாம் பல மொழிகளை கற்றுக் கொள்ளலாம். ஆனால் தாய்மொழியை எப்போதும் மறந்துவிடக்கூடாது' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com