என்ஆர்சி-க்கு விண்ணப்பித்த 3.3 கோடி பேரின் பட்டியல் இணையத்தில் வெளியீடு

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) இடம்பெறுவதற்காக விண்ணப்பித்திருந்த 3.3 கோடி விண்ணப்பதாரர்களின் முழுப் பட்டியல் சனிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
என்ஆர்சி-க்கு விண்ணப்பித்த 3.3 கோடி பேரின் பட்டியல் இணையத்தில் வெளியீடு

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) இடம்பெறுவதற்காக விண்ணப்பித்திருந்த 3.3 கோடி விண்ணப்பதாரர்களின் முழுப் பட்டியல் சனிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறி வசிப்பவர்களை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் வரைவுப் பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சுமார் 40 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். இதையடுத்து, விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, என்ஆர்சி இறுதிப் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். இந்தப் பட்டியலில், புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் விவரங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், பதிவேட்டில் இடம்பெறுவதற்காக விண்ணப்பித்திருந்த 3.3 கோடி மக்களின் விவரங்கள், இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள், பட்டியலிலிருந்து விடுபட்டவர்களின் விவரங்கள் உள்ளிட்டவை அடங்கிய முழுப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த விவரங்கள் ஆங்கிலம் மற்றும் அஸ்ஸாமி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் மூலம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் என்ஆர்சி இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனரா, இல்லையா என்பதை எளிதில் கண்டறிய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இருந்தபோதிலும், இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் முறையிடுவதற்கான சான்றிதழ் இன்னமும் வழங்கப்படவில்லை. அந்தச் சான்றிதழ்களை வழங்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறுதிப் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டோர், பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்து 120 நாள்களுக்குள் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் முறையிட வேண்டியது அவசியமாகும்.

பாதுகாப்புப் படையினர் வாபஸ்: என்ஆர்சி இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டதையடுத்து, அஸ்ஸாம் மாநிலத்தில் காவல் பணிக்காகக் குவிக்கப்பட்டிருந்த சுமார் 10,000 பாதுகாப்புப் படை வீரர்களை மத்திய அரசு சனிக்கிழமை திரும்பப் பெற்றது. இறுதிப் பட்டியல் வெளியான பிறகு, அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நிகழாததைக் கருத்தில்கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் 19-ஆம் தேதியிலிருந்து மாநிலம் முழுவதும் சுமார் 21,800 பாதுகாப்புப் படையினர் காவல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com