காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் 41-ஆவது நாளாக சனிக்கிழமையும் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் 41-ஆவது நாளாக சனிக்கிழமையும் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ஆம் தேதி நீக்கியது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகின்றன.
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சனிக்கிழமையும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. இணையதளச் சேவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. பள்ளத்தாக்கு முழுவதும் தொலைபேசி சேவைகள் வழங்கப்பட்டு வந்தாலும், செல்லிடப்பேசி சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. 
வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் குப்வாரா மற்றும் ஹந்த்வாரா பகுதிகளில் மட்டுமே செல்லிடப்பேசி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும், அச்சம் காரணமாக குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் தயங்கி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வழிபாட்டின்போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள முக்கிய மசூதிகளில் வழிபாடு நடத்துவதற்கான அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. 
முக்கியத் தலைவர்கள் அனைவரும் வீட்டுக் காவலிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாடுகள் தளர்வு: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த பகல்நேரக் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை தளர்த்தப்பட்டன. 
மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிஷ்த்வார் மாவட்டத் தலைவர் ஷேக் நஸீர் ஹுசைன் வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த மர்ம நபர்கள், அவரின் பாதுகாப்பு அதிகாரியிடமிருந்த துப்பாக்கியை அபகரித்துச் சென்றனர். இதையடுத்து, கிஷ்த்வார் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டத்தில் பகல்நேரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக மாவட்ட வளர்ச்சி ஆணையர் அங்ரேஸ் சிங் ராணா சனிக்கிழமை தெரிவித்தார். எனினும், இரவுநேரக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும், துப்பாக்கியை அபகரித்துச் சென்ற நபர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com