சத்தீஸ்கரில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 வெவ்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 வெவ்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பஸ்தர் பிராந்தியத்துக்கு உள்பட்ட சுக்மா, பிஜாப்பூர், தந்தேவாடா ஆகிய மாவட்டங்களில் இந்த மோதல்கள் நடைபெற்றன.
தந்தேவாடாவில்...: தந்தேவாடா மாவட்டத்தில் கிரண்துல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப்பகுதியில், மாவட்ட ரிசர்வ் படை மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்த கூட்டுப் படையினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நக்ஸல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனப்பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். சிறிது நேர துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு, நக்ஸலைட்டுகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டனர். சம்பவ இடத்தில் இருந்து, துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் இரு நக்ஸல்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து, அவர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. 
தந்தேவாடா பேரவை தொகுதிக்கு வரும் 23}ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்த மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிஜாப்பூரில்...: பிஜாப்பூர் மாவட்டத்தின் புன்னூர் கிராமம் அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே சனிக்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஒரு நக்ஸல் தீவிரவாதி கொல்லப்பட்டார். மாவட்ட ரிசர்வ் படையினர், நக்ஸல் தேடுதல் வேட்டையின்போது இந்தச் சம்பவம் நடந்ததாக, காவல்துறை டிஐஜி (நக்ஸல் எதிர்ப்பு நடவடிக்கைகள்) சுந்தர்ராஜ் கூறினார். நக்ஸல் தீவிரவாதியின் சடலம் அருகே ஒரு துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.
சுக்மாவில்...: சுக்மா மாவட்டத்தில், தாட்மெல்தா என்ற இடத்தருகே சாலையில் நக்ஸல் தீவிரவாதிகள் பள்ளம் தோண்டி வைத்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ரிசர்வ் படையினர், அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று சனிக்கிழமை மாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினரின் பதிலடிக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் நக்ஸல்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பிச் சென்று விட்டனர். பிறகு அந்த இடத்தைச் சோதனையிட்டபோது அங்கிருந்து 2 நக்ஸல்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. அங்கிருந்து ரைஃபிள் துப்பாக்கியும், சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com