வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகளுக்கு அரசு புதிய உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த அனைவரும் தாங்கள் யாரையும் மத மாற்றம் செய்ததாக குற்றம்சாட்டப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை என்று அரசுக்கு

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த அனைவரும் தாங்கள் யாரையும் மத மாற்றம் செய்ததாக குற்றம்சாட்டப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை என்று அரசுக்கு உறுதிமொழிச்சான்று அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்ட விதிகளில் கடந்த 2011-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற விரும்பும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த அமைப்பாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும், தங்கள் மீது மத மாற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குகள் நிலுவையில் இல்லை; இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை; சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, அந்த நிதியை வேறு பயன்பாட்டுக்கு செலவு செய்யவில்லை, தேச விரோதச் செயல்களை ஊக்குவிக்கவில்லை; வன்முறையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தவில்லை என்றும் சான்றிதழ் அளிக்க வேண்டும்.
இதற்கு முன்பு வெளிநாட்டு நன்கொடை பெற விரும்பும் தன்னார்வ அமைப்பின் இயக்குநர்கள் மட்டுமே இதுபோன்ற உறுதிமொழியை அளித்தால் போதுமானதாக இருந்தது.
இதேபோல், வெளிநாடுகளில் இருந்து ரூ.1 லட்சம் வரையிலான மதிப்புள்ள பரிசுப் பொருள்களைப் பெறும்போது, அதுகுறித்து அரசிடம் தெரிவிக்கத் தேவையில்லை என திருத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, ரூ.25 ஆயிரம் வரையிலான பரிசுப் பொருள்களைப் பெறும்போது அரசிடம் தெரிவிக்கத் தேவையில்லை என்ற விதிமுறை இருந்தது.
தன்னார்வ அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கான வதிமுறைகளையும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்ட விதிகளை மீறியதாக, 18,000 தன்னார்வ அமைப்புகளின் வெளிநாட்டு நன்கொடை பெறும் அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com