Enable Javscript for better performance
ஜம்மு-காஷ்மீரில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க ஊக்கமளித்தவர் வல்லபபாய் படேல்: பிரதமர் நரேந்திர மோடி- Dinamani

சுடச்சுட

  

  ஜம்மு-காஷ்மீரில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க ஊக்கமளித்தவர் வல்லபபாய் படேல்: பிரதமர் நரேந்திர மோடி

  By DIN  |   Published on : 18th September 2019 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  குஜராத் மாநிலம் கெவாடியா பகுதியிலுள்ள கற்றாழைப் பூங்காவை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி. உடன் மாநில முதல்வர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத் உள்ளிட்டோர்.


  ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் விவகாரத்துக்கு, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலின் கொள்கைகள்தான் ஊக்கமளித்தன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

  பிரதமர் மோடி, தனது 69-ஆவது பிறந்த நாளை சொந்த மாநிலமான குஜராத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடினார். குஜராத்தில், நர்மதை நதியின் மீது அமைந்துள்ள சர்தார் சரோவர் அணை தனது முழுக் கொள்ளளவான 138.68 மீட்டரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை எட்டியது. அணையின் நீர்த்தேக்க அளவு கடந்த 2017-ஆம் ஆண்டு 138.68 மீட்டராக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, அணை தனது முழுக் கொள்ளளவை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

  இந்த நிகழ்வையொட்டி, நர்மதை நதிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சிக்கு குஜராத் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதில், கலந்துகொள்வதற்காக செவ்வாய்க்கிழமை காலை குஜராத்தின் கெவாடியா பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வருகை தந்தார். பின்னர், மாநில முதல்வர் விஜய் ரூபானியுடன் இணைந்து, சர்தார் சரோவர் அணைப் பகுதியிலிருந்து நர்மதை நதிக்கு ஆரத்தி எடுத்து, வழிபாடு நடத்தினார். முன்னதாக, சர்தார் சரோவர் அணை அருகே அமைந்துள்ள வல்லபபாய் படேலின் பிரம்மாண்ட சிலையை அவர் பார்வையிட்டார். ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட சிலையின் விடியோவையும் தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், அணைக்கு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

  பின்னர் கெவாடியாவிலுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்குச் சென்றார். அதையடுத்து, சர்தார் சரோவர் அணைக்கு அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது: பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசு முயன்று வருகிறது. வல்லபபாய் படேலின் கொள்கைகளே அந்த நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்து வருகின்றன. கடந்த 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி, அப்போதைய ஹைதராபாத் சமஸ்தானத்தை வல்லபபாய் படேல் இந்தியாவுடன் ஒன்றிணைத்தார். அவரது பெருமுயற்சி காரணமாகவே, ஹைதராபாத் இந்தியாவுடன் ஒருங்கிணைந்தது.

  பயணிகள் வருகை அதிகரிப்பு:
   வல்லபபாய் படேலின் ஒற்றுமைக்கான சிலையைப் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்காவிலுள்ள 133 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுதந்திர தேவி சிலையை நாள்தோறும் சராசரியாக 10,000 சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கின்றனர். கட்டி முடிக்கப்பட்டு 11 மாதங்களே ஆன இந்த சர்தார் வல்லபபாய் படேலின் ஒற்றுமைக்கான சிலையை நாள்தோறும் சராசரியாக 8,500 பயணிகள் பார்வையிடுகின்றனர்.

  சர்தார் சரோவர் அணையானது, மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில மக்களுக்குப் பயனளித்து வருகிறது. இந்த அணையின் கட்டுமானத்துக்கு உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, வளர்ச்சிப் பணிகளையும் முன்னெடுப்பதே நமது கலாசாரத்தின் அடையாளமாகும். 
  சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் அதிக அளவில் விளைச்சல் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் பிரதமர் மோடி.

  தாயிடம் ஆசி பெற்ற மோடி:


  இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மாநிலத் தலைநகர் காந்திநகருக்குச் சென்றார் பிரதமர் மோடி. தனது பிறந்த நாளையொட்டி, தாய் ஹீரா பென்னைச் சந்தித்து ஆசி பெற்று, அவருடன் சேர்ந்து மோடி உணவருந்தினார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai