ஹைதராபாதில் உள்ள ஆளுநர் மாளிகையில், தெலங்கானா ஆளுநராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்ட தமிழிசை செளந்தரராஜன். உடன் முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர்
ஹைதராபாதில் உள்ள ஆளுநர் மாளிகையில், தெலங்கானா ஆளுநராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்ட தமிழிசை செளந்தரராஜன். உடன் முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர்

கிரண்பேடி பாணியில் களமிறங்கப் போகிறாரா தமிழிசை? அதிருப்தியில் தெலங்கானா அரசு!

தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழிசை சௌந்தராஜன், கிரண்பேடி பாணியில் நேரடியாக மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறியும் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழிசை சௌந்தராஜன், கிரண்பேடி பாணியில் நேரடியாக மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறியும் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் அரசுக்கு இணையாக, ஆளுநரும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவது குறித்து தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை ஓரங்கட்டும் வகையிலோ அல்லது அதற்கு இணையாக தமிழிசையும் 'மக்கள் தர்பார்' எனப்படும் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டறியும் பணியில் ஈடுபடுவது என்று முடிவெடுத்திருப்பது குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தில்லி முன்னாள் ஆளுநர் நஜீப் ஜங் மற்றும் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ஆகியோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது முறையே அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் வி. நாராயணசாமி அரசுகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, இரு தரப்புக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது, நிலவி வருகிறது.

ஆனால், இதுவரை தெலங்கானா ஆளுநருக்கும், ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால், அதனை டிஆர்எஸ் விரும்பவில்லை.

இதுவரை தெலங்கானாவின் மிக முக்கியக் கட்சியாக டிஆர்எஸ் விளங்கி வருகிறது. இந்த பிரச்னை மூலம், பாஜகவும் தெலங்கானாவில் காலூன்றி முக்கிய எதிர்க்கட்சியாக மாறுவதை டிஆர்எஸ் விரும்பவில்லை.

இந்த எண்ணத்தை டிஆர்எஸ் எத்தனை நாட்களுக்கு செயல்படுத்த முடியும் என்று தெரியவில்லை. காரணம், செப்டம்பர் 16ம் தேதி மஜ்லிஸ் பசாவோ டெஹ்ரீக் செய்தித் தொடர்பாளர் அம்ஜெத் உல்லா கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எழுதிய கடிதத்தில், ஒவ்வொரு வாரமும் பிரஜா தர்பார் எனப்படும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டறியும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழிசை, "உங்கள் யோசனைக்கு மிகவும் நன்றி. ஏற்கனவே இது பற்றி ஆழ்ந்து பரிசீலித்து வருகிறேன்" என்று தெரிவித்திருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த பதிலால் அதிர்ந்து போன டிஆர்எஸ், தில்லி மற்றும் புதுச்சேரி பாணியில் தெலங்கானாவிலும் ஆளுநர், ஆளும் கட்சி இடையே மோதல் போக்கு ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் கொள்ளும் அதே நேரத்தில், எந்த வகையிலும் மத்தியில் ஆளும் பாஜகவுடன் மோதல் போக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளனர்.

இது பற்றி டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்வர் ரெட்டி, மிக கவனமாக பதிலளித்துள்ளார். அதாவது, இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது ஆளுநர் மக்களிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்டு வருகிறாரா? அதுபோல ஆளுநர் மக்கள் குறைகளைக் கேட்டறிய சட்டத்தில் இடமிருக்கிறதா? ஒரு வேளை சட்டத்தில் இடமிருந்தால் செய்யலாம், நாங்கள் எந்த ஆட்சேபனையும் செய்ய மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே, பாஜகவுக்கும் டிஆர்எஸ் கட்சிக்கும் இடையே ஒரு செய்து கொள்ளப்படாத ஒப்பந்தம் போல ஒற்றுமையான சூழல் நிலவி வருகிறது. அந்தவகையில், நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த முத்தலாக், ஜிஎஸ்டி, ஆர்டிஐ, 370 சட்டப்பிரிவை நீக்குவது போன்றவற்றுக்கு டிஆர்எஸ் ஆதரவு அளித்தது.

அதே போல, தெலங்கானா தேர்தலிலும், பாஜக, டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபடாமல் தவிர்த்தது போன்றவற்றை சொல்லலாம்.

2018ம் ஆண்டு வரை  தெலங்கானாவில் ஒரே ஒரு தொகுதியைக் கைப்பற்றியிருந்த பாஜக, 2019ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஓரளவுக்கு காலூன்றியதால், 2023ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானாவில் வென்று ஆட்சியமைக்க முடியும் என்ற உத்வேகத்தோடு செயலாற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு வழிவகுத்துக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் டிஆர்எஸ் கட்சி மிகக் கவனமாக இருந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com